அமரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் 16.02.2026 அன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் வேலுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது ‘சேயோன்’ என்பது தமிழ் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், இப்படம் முருகனை மையப்படுத்திய கிராமத்துக் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
“மீண்டும் ஒரு முறை இணைகிறோம், மாபெரும் கொண்டாட்டத்திற்காக” என்று சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விவேக் விஜயகுமார் கவனிக்க, சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இக்கூட்டணி இரண்டாவது முறையாக வணிக ரீதியாக இணைந்திருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படத்தை முடித்த பிறகு ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.