எம்.ஜி.ஆர்-அரவிந்தசாமி

இயக்குநர் விஜய் இயக்கும் தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் நடிக்கும் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது.

காலம் சென்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை தலைவி என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்துவருகிறார் இயக்குநர் விஜய்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நவம்பர் 23 அன்று வெளியானது. அதில் கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் முதல் திரைப்படமான வெண்ணிற ஆடை திரைப்படத்தின் பாடல் ஷூட்டிங் நடப்பது போலவும், அதை தொடர்ந்து அரசியல் மேடையில் ஜெயலலிதா அவர்கள் தொண்டர்களை நோக்கி கையசைப்பது போலவும் காட்சிகள் வெளியாகி இருந்தன.

இதில் கங்கனாவின் தோற்றம் வெளியிடப்பட்டிருந்தது. இது பெருமளவில் விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் கெளதம் வாசுதேவ் மேனன், மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கிய “குயின்” வெப்சீரீஸ் வெளியானது. இதுவும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாகவும், இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆர் கேரக்டரிலும் நடித்திருந்தனர். கலவையான வரவேற்பைப் பெற்ற இந்த சீரீஸ், இயக்குநர் விஜய் இயக்கி கொண்டிருந்த தலைவி படத்துக்கு பின்னடைவாக அமைந்தது. ரசிகர்கள் இரண்டு படைப்புகளையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்யத் துவங்கினர்.
நேற்று17.01.2020 எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிக்கும் அரவிந்த் சாமியின் லுக்கும், அதைத் தொடர்ந்து இரண்டாவது டீசரும் வெளியாகியது. முன்னர் கங்கனாவின் பர்ஸ்ட் லுக்கில் ஏற்பட்ட சர்ச்சை போல் அல்லாமல், எந்த விமர்சனத்திற்கும் இடமளிக்காமல் ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து வெளியான டீசரும் அதை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் எம்ஜிஆர் அவர்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.
நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆர் அவர்களை தத்ரூபமாக பிரதி எடுத்திருந்தார். இது தலைவி படத்திற்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இத்திரைப்படத்தில் ப்ரியாமணி சசிகலா கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவரை அடுத்து விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிகின்றனர். தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தலைவி படத்திற்கு கதை திரைக்கதை எழுதுகிறார்.
இவர் மகதீரா, பாகுபலி 1&2, மெர்சல், பஜ்ரங்கி பைஜான் போன்ற வெற்றிப் படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் தயாராகி வருகிறது. வரும் ஜூன் 26க்கு திரைக்கு வர இருக்கிறது.