அதர்வாவுக்கு உறவினரான விஜய்

ஒரு அமைதியான காதல் கதை பல திருப்பங்களுடன் நிச்சயதார்த்தத்தைக் கடந்து, தற்போது திருமணத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
ஆகாஷ், சினேகா ஆகிய இருவரும் சிங்கப்பூரில் ஒன்றாகப் படித்தவர்கள்.

சினிமா முதல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வரையிலும் ஒன்றாகப் படித்தவர்களுக்கு இடையேயான புரிதலும், விருப்பங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், காலம் இருவரையும் பிரித்தது. சினேகாவை சீக்கிரமே சினிமா ஈர்த்தது.

‘சட்டம் ஒரு இருட்டறை -2திரைப்படத்தை இயக்குவதற்காக இந்தியா வந்தார் சினேகா. சினிமாவில் நடிகனாக முயற்சிக்கும் ஆகாஷ், படிப்பைத் தொடர சிங்கப்பூரிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

காதலை காத்திருக்கச் சொல்லிவிட்டு இருவரும் தங்களுக்குப் பிடித்த தொழிலின் மீது கவனம் செலுத்தினர்.

சென்னைக்கு வந்து படம் உருவாக்குவதில் ஈடுபாடுடன் இருந்த சினேகா, படத்தை இயக்கி முடித்தார். படமும் ரிலீஸாகி பெயரும் கிடைத்தது.

தனது வாழ்க்கையில் தனியாக ஒரு வெற்றியை பெற்ற மகிழ்ச்சியிலும், அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையிலும் தன் காதல் பற்றி பெற்றோரிடம் சொன்ன சினேகாவுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. சினேகாவின் காதல் மதம் காரணமாக நிராகரிக்கப்பட்டது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஆகாஷுக்கு, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சினேகாவை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை சேவியர் பிரிட்டோ சம்மதிக்கவில்லை.

ஆகாஷ் யாரோ ஒருவர் அல்ல காலம் சென்ற நடிகர் முரளியின் இளைய மகன் தான் ஆகாஷ். அவர் பெயர் ஆகாஷ் முரளி என்று சினேகா எவ்வளவு சொல்லியும் பயனில்லாமல் போனது. குடும்பத்தின் எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்தது.

சிங்கப்பூரில் படிப்பை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிய ஆகாஷ் சேவியர் பிரிட்டோவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருக்குப் பின்னாக நடிகர் முரளியின் மூத்த மகனும், ஆகாஷின் அண்ணனுமான அதர்வா முரளியும் தந்தை ஸ்தானத்திலிருந்து சினேகாவின் குடும்பத்துடன் பேச அனைத்தும் சுமூகமாக முடிந்தது.

கடந்த நவம்பர் மாதமே, டிசம்பர் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் என முடிவெடுக்கப்பட்டு, நல்லபடியாக நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்தத்துக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கவேண்டும் என்பதால், தனது மனைவியின் அண்ணனான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்க்கும் அழைப்பு விடுத்தார் சேவியர் பிரிட்டோ.

எனவே, குடும்ப சகிதம் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு நடிகர் விஜய் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிப்பவர் சேவியர் பிரிட்டோ தான்.
படத் தயாரிப்பு வேலைகளுக்காக, ஒரு மாதத்துக்கு முன்பு விஜய்யை அவ்வப்போது சந்தித்த சினேகா பிரிட்டோ தனது காதலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விஜய்யிடம் பேசியதாகவும், சினேகாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பிய விஜய், தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசியிருக்கிறார் என்றும் அதன் பின்னாலேயே இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.