தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி-முருகதாஸ் இருவரும் தெரிந்துகொண்டு அதனை சரி செய்வதற்கு முன்வரவேண்டும் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
தர்பார் படம் வாங்கிய விநியோகஸ்தர்களை ரஜினியிடம் நஷ்ட ஈடு கேளுங்கள் என்று தூண்டிவிட்டது பைனான்சியர் அன்புச்செழியன் என்று கோடம்பாக்கத்தில் செய்தி பரவியது.
தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், காரியமே கண்ணாக நஷ்டத் தொகையை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை நிர்வாக ரீதியாக மேற்கொண்டு வருகின்றனர். லிங்கா படத்திற்கு நஷ்டஈடு தொகை பெற உண்ணாவிரதம், பிச்சை எடுக்கும் போராட்டம் என கடுமையானநெருக்கடிகளை ஏற்படுத்திய பின்னரே ரஜினிகாந்த் நஷ்டஈடு தொகையை கொடுக்க சம்மதித்தார்.
தர்பார் பட விவகாரத்தில் அப்படி ஒரு ஒற்றுமை ஏற்படவில்லை. இருந்தபோதிலும் செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூர், சேலம் ஆகிய ஏரியாக்களில் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் முழுமையாக வசூல் ஆகவில்லை என்பதால் விநியோகஸ்தர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் படம், முருகதாஸ் இயக்கும் படம் இவற்றுக்கு தொழில் ரீதியாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்கிற முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆகிய இரு தரப்பும் இணைந்து எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை வியாபாரம் செய்வதில், திரையரங்குகளில் திரையிடுவதில் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினி நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்த பேட்ட படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது.
-இராமானுஜம்.