பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை

பாரதிராஜாவின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம் பிப்ரவரி 21-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

43 வருடங்களாகத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பங்காற்றி வரும் பாரதிராஜா, 1977-ஆம் ஆண்டு வெளியான பதினாறு வயதினிலே திரைப்படம் மூலமாகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழக மக்களின் வாழ்க்கையையும் தனது படங்கள் மூலமாகத் திரையில் காட்டி அவர் தமிழ் சினிமாவிற்கு பல ஒப்பற்ற படைப்புகளைத் தந்துள்ளார். அவர் கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமின்றி திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார்.

 பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘முதல் மரியாதை’ திரைப்படம், தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘பாரதிராஜாவின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற திரைப்படம் உருவாகிறது’ என்னும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆறு வருடங்களுக்கு முன்னர், 2014-ஆம் ஆண்டே இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

முதலில் படத்திற்கு ‘ஓம்(ஓல்ட் மேன்)’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. வாழ்க்கை அனுபவம் மிக்க முதியவருக்கும், வாழத் துவங்கிய இளம்பெண்ணுக்கும் இடையேயான கதையைத் திரைப்படம் பேச வருவதாக அறிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, பயணம் சார்ந்த கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் நட்சத்திரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற நிலையில் படத்தின் பெயர் ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்று மாற்றப்படுவதாக பாரதிராஜா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்