பூமி படத்தின் கதை என்னுடையது உதவி இயக்குனர் போர்க்கொடி

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் பூமி. இந்தப் படம் அவருடைய நடிப்பில் 25ஆவது படம். இந்தப் படத்தின் கதை, தன்னுடைய கதை என்று உதவி இயக்குநர் ஒருவர் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார்.
ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மண் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாகி வரும் நிதி அகர்வால் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.
செப்டம்பர் 10ஆம் தேதி, நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளன்று இந்தப் படத்தின் ‘தமிழனென்று சொல்லடா’ எனும் பாடல் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலைப் பாடி, படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் இந்தப் படத்தின் கதை, தன்னுடைய கதை என்று உதவி இயக்குநர் ஒருவர் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இது சம்பந்தமான புகாரை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட எழுத்தாளர் சங்கத்தினர் விசாரித்ததில் இவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் இறுதி முடிவைச் சொல்ல வேண்டிய பாக்யராஜின் மாமியார் இறந்துவிட்டதால் அவர் வருகைக்காகக் காத்திருக்கின்றனர் எழுத்தாளர் சங்கத்தினர்.
இதற்கிடையில் பூமி படக்குழுவினர் அந்த உதவி இயக்குநரைச் சந்தித்து, பிரச்னையை பெரிதாக்காதீர்கள். உங்களுக்கான உரிய ஏற்பாட்டை ஜெயம் ரவி மூலம் செய்கிறோம்” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.