எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் கொடுக்கவில்லை என்பதால், தொடர்பாகப் பிரபலங்களிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள்.இது சமூகவலைதளத்தில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.எப்போதுமே தன் படங்கள் குறித்துப் பேசவிரும்பாத அஜித், ரசிகர்களின் இந்தச் செயல் தொடர்பாக வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அஜித் கூறியிருப்பதாவது:
“என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட அப்டேட்கள் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் , சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும்.இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்”
இவ்வாறு அஜித் தெரிவித்துள்ளார்