காட்மேன் தொடருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

காட்மேன் என்னும் பெயரில் தயாரான இணையத் தொடருக்கு பிராமணர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அத்தொடரை நிறுத்தி வைத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”திரைப்படத் தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ‘காட் மேன்’ தொடர் Zee5 இணைய தளத்தில் வெளியிட படமாக்கப்பட்டு வருகிறது.

இதன் முதல் காட்சி 12-06-2020 அன்று Zee5 இணைய தளத்தில் வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்தத் தொடர் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்ல வருகிறது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் தங்கள் சமூகத்திற்கு எதிரான வசனம் இருக்கிறது என்று காரணம் கூறி ‘உலக பிராமணர்கள் நலச் சங்கம்’ என்ற பெயரில் ஒருவர் சைபர் குற்றப் பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த அடிப்படையற்ற புகார் மீது முன்னாள் மத்திய அமைச்சர், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி அதிகார மையத்தில் , தனது செல்வாக்கை செலுத்தி அழுத்தம் கொடுத்ததால் 10 குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ‘காட்மேன்‘ தொடர் வெளியாகாமல் தடுக்கும் கருத்துரிமைப் பறிப்பு கும்பலின் வாய் மொழி வன்முறை தாக்குதல் பல்வேறு தளங்களிலும் நடத்தி வருகின்றனர்.

இதனையொட்டி எழுந்துள்ள நெருக்கடியில் Zee5 இணைய தளம் ‘காட்மேன்‘ தொடர் வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

‘காட்மேன்’ தொடருக்கு எதிரான தாக்குதல் பாசிச வகைப்பட்ட வன்முறையாகும். நரேந்திர தபோல் கர், கோவிந் பான்சாரே, எம்.எம்.கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் என பல முற்போக்கு சிந்தனையாளர்களின் ‘குரலை’ அழித்தொழித்த பிற்போக்கு கும்பலின் தமிழ்நாட்டின் வெளிப்பாடாகவே ‘காட்மேன்’ தொடருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை பார்க்க வேண்டியுள்ளது.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பரப்புரை செய்த அறிவியல் கருத்துகளோடு, தந்தை பெரியார் இறுதி மூச்சு வரை சலிப்பறியாது விதைத்த பகுத்தறிவுக் கருத்துகள் விளைந்து வலிமை பெற்றுள்ள தமிழ் மண்ணில் பேராசான் ப. ஜீவானந்தம், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோர் களப்பணியாற்றிய தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ‘காட்மேன்’ இணைய தளத் தொடருக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, இது தொடர்பான வழக்கை இரத்து செய்து, கருத்துரிமை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜக மத்திய அரசின் அதிகாரத்தின் துணையோடு தமிழ்நாட்டில் நடைபெறும் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை எதிர் கொள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.