அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று

இந்திய சினிமாவில் மூத்த நடிகர்,

தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், வீட்டிலிருந்த பிற வேலையாட்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டனர். அதில் அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை நடிகர் அமிதாப் பச்சன் நேற்று (ஜூலை 11) இரவு 11 மணி அளவில் தனது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக பகிரங்கமாக எந்த தயக்கமும் இன்றிஅறிவித்திருக்கிறார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். எனது குடும்பத்தினர் மற்றும் வேலையாட்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

கடந்த பத்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.அதே போன்று நடிகர் அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டன. இப்போது நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம்.
உரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். மேலும், எங்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாட்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் அமைதியாகவும், அச்சமின்றியும் இருக்க நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1969ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது வயது 77 ஆகிறது. கொரோனா அச்சம் மற்றும் லாக்டெளன் காரணமாக அவர் வீட்டிலேயே இருந்த நிலையில் அவருக்கு கொரானோ தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா, அவர்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி நம்பிக்கை வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். தாங்கள் மிகவும் நேசிக்கும் தங்களுடைய அமிதாப் பச்சன் கொரோனாவை வென்று விரைவில் நலம்பெற வேண்டும் என அவரது ரசிகர்களும் பிரார்த்தனைகளில் மூழ்கியுள்ளனர்.