ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் விருது

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில்

“உயரிய விருதான தாதாசாகேப்
பால்கே விருது உச்ச நட்சத்திரமும்
என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது” திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிருபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என கூறியுள்ளார்
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில்
தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு என் வாழ்த்துகள் இந்த விருது அவரது கலைப்பயணத்தின் முற்றுப்புள்ளி என்று கருதிவிட முடியாது அடுத்த சிகரம் அடைவதற்கான ஆக்சிஜன் என்று கருத வேண்டும் அவர் கருதுவார்
என கூறியுள்ளார்