லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இந்தப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது சன் பிக்சர்ஸ் களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின் மைத்துனர் பாலாஜியும் இப்படத்தை வாங்கி வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேல்ஸ் ஐசரி கணேஷ் 65 கோடி ரூபாய் மற்றும் GST என்று தனது விலையை குறிப்பிட்டுள்ளார். லைகா நிறுவனத்தில் தர்பார் படத்தின் வியாபாரத்தை பேசி முடிப்பதற்கு அனுபவரீதியாக தகுதியான நபர்கள் இல்லை என்பதால், ஒவ்வொரு நாளும் விலையை மாற்றி மாற்றி கூறி வருகின்றனர். அதேநேரம் கல்வி நிறுவனம், தொலைக்காட்சி நிறுவனம், அரசியல்வாதிகள் என்று படத்தை வாங்குவதற்கு போட்டியிடுவதால், தர்பார் படத்தின் தமிழக உரிமைக்கான விற்பனை மூலம் ஒரு மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்த்து படத்தின் விலையை 80 கோடி ரூபாய் என்று கூறத் தொடங்கியுள்ளது லைகா நிறுவனம்.
தொடக்கத்தில் கூறிய விலை எழுபது கோடி. ஆனால், எல்லா விநியோகஸ்தர்களும் அறுபது கோடிக்குள்ளேயே விலையை கேட்டு இருக்கிறார்கள். இதனால் வியாபாரம் முடியாமல் தர்பார் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான பேட்ட படம், தமிழக திரையரங்குகள் வசூல் மூலம் தயாரிப்பாளரின் பங்காக கிடைத்தது சுமார் 49.50 கோடி.
முந்தைய படத்தின் வசூல் நிலவரம் அப்படி இருக்கும் நிலையில், இந்தப்படத்துக்கு 80 கோடி ரூபாய் என்று விலை சொல்வது பேராசை. 2.0 படத்துக்கும் இதேபோல் போட்டியிருந்தது என்று அதிக விலை சொன்ன லைகா, அந்தப்படத்தை வாங்கிய அனைவருக்கும் வசூலாகாத தொகையை திருப்பிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்துக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு உரிமையை அதிக விலைக்கு மொத்தமாக ஒருவரிடம் கொடுத்துவிடலாம் என லைகா தெளிவில்லாமல் முயற்சி மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள். இந்த விவரங்களை அறிந்த ரஜினி, லைகா ஏன் இப்படிச் செய்கிறார்கள்? என்று அதிருப்தியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.