ஆப்கான் பிரச்சினை பற்றி சேரன் கருத்து என்ன தெரியுமா?

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது உலக அரங்கில் கவனத்தையும், அரசியல் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது இது சம்பந்தமாக ஆதரவு, எதிர்ப்பு என பலரும்பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆப்கான் சினிமா பெண் இயக்குனரான சஹ்ரா கரிமி, உலகம் முழுவதும் உள்ள சினிமா சமூகத்திற்கும், சினிமா காதலர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து ஆப்கான் நிலைமை பற்றிய கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், “தாலிபான்களிடமிருந்து சினிமா படைப்பாளிகளையும், எனது அழகான மக்களையும் பாதுகாக்க எங்களுடன் நீங்கள் இணைவீர்கள் என்ற ஆழமான எதிர்பார்ப்புடன் இந்தக் கடிதத்தை உடைந்த இதயத்துடன் எழுதுகிறேன்,” என்று அவரது டுவிட்டரில் மூன்று தினங்களுக்கு முன்பு எழுதியுள்ளார்.

அவரது பதிவை இந்தியத் திரையுலகினர் சிலரும் ஷேர் செய்துள்ளனர். தமிழ் சினிமா இயக்குனரான சேரன், அந்தப் பதிவை ஷேர் செய்து, “ஆப்கானிஸ்தானின் இயக்குனர் சஹாரா கரீமி அவரது சமூகத்தில் நடக்கும் அநீதி, தாலிபான் மூலமாக கொடுக்கப்படும் அச்சுறுத்தலும், இழப்புகளும், அழிப்புகளும், பெண்களை குழந்தைகளை எப்படி சிதைக்கிறார்கள் என்பதை அவரின் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.. நம்மை அறியாமல் கண்களில் நீர் நிற்கிறது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சேரனின் அந்தப் பதிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வேறு விதமான எதிர்மறை கருத்துக்ளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது பற்றிய தகவல் சேரனுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. ஆப்கான் பற்றிய அவரது பதிவை தற்போது டெலிட் செய்து விட்டார்.

மேலும், தன்னுடைய எதிர்ப்பாளர்களுக்கு புதிதாக, “அரசியல் காழ்ப்புணர்வுகளோடு, மத இன உணர்வுகளோடு வெறி கொண்டு அழையும் எவரும் என் நண்பர்களாக இணைய வேண்டாம்.. நாகரீகம் தெரியாமல் வார்த்தைகள் பயன்படுத்தும் எவரையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.. அப்படி மீறி வந்தால் பிளாக் பண்ணத்தான் செய்வேன்.. அப்பறம் ஸ்கிரீன் ஷாட் போட்டு கதறக்கூடாது,” என டுவிட்டரில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.