வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்-கமல்ஹாசன்

‘நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளம் அல்ல’ என்று நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நேற்று(ஜூலை 18) காவி சாயம் ஊற்றப்பட்டதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப்பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியல் என்று மட்டும் அவர் கூறியுள்ளதால், அது முருகன் மீதான நம்பிக்கையா? அல்லது பெரியார் மீதான நம்பிக்கையா? என்பதைத் தெரியாமல் ட்விட்டர் வாசிகள் பலரும் கமல் குழப்புவதாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.