நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, மதுரை அன்புச்செழியனுக்கு சொந்தமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்தக் கடனை விஷாலுக்கு பதிலாக தாங்கள் திருப்பித் தருவதாக லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தங்களுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியே 29 இலட்சம் பணத்தைக் கொடுக்காமல் நடிகர் விஷால் தயாரிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தமிழ் உள்ளபட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.வழக்கை விசாரித்த பின்15 கோடி ரூபாயை வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக வைக்க செலுத்த வேண்டும் என்று நடிகர் விஷாலுக்கு மார்ச் மாத இறுதியில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் விஷால் அவ்வாறு பணத்தை வைப்பீடு செய்யவில்லை.தொடர்ந்து வழக்கு நடந்துவந்தது. இறுதியாக தனிநீதிபதி, விஷால் பதினைந்து கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியாக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் விஷால்.அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று மாலை வெளியாகியுள்ளது.அதில், லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய 21.29 கோடியில், 15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.தொகையைச் செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இப்போது விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் துப்பறிவாளன் -2 படம் மட்டும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் விஷால் தொடர்ச்சியாக வேறு நிறுவனங்களின் தயாரிப்பில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வெளிவரும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் நீதிமன்ற தீர்ப்பால் விஷாலுக்கு தற்போதைக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொன்னாலும் தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உடன் தயாரிப்பு, விநியோகம் என இரண்டிலும் லைகா நிறுவனத்துடன் தொழில் கூட்டாளியாகவும், பங்குதாரராகவும் இருப்பதால் விஷால் நடிப்பில் அடுத்து எந்தப்படம் வெளியிட திட்டமிட்டாலும் விஷால் பணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே தமிழ்நாட்டில் படம் வெளியிட முடியும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.
Sign in