ஹீரோ படத்துக்கு நீதிமன்றம் தடை?

0
324

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘ஹீரோ’ படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது என செய்திகள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் விளக்கம் அளித்துள்ளது.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் வரும் படம் ‘ஹீரோ’. இரும்புத் திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
டிசம்பர் 20ஆம் தேதி, இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல், ‘ஹீரோ’ படத்திற்கு இடைக்கால தடை என செய்திகள் வெளிவந்தன. அதில், 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கிய 10 கோடி கடன் தொடர்பாக டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததாகவும், இந்த விவகாரத்தில் ‘ஹீரோ’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக ‘ஹீரோ’ படத்தைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது டிவிட்டர் பதிவில், “டிவி, ரேடியோ, செய்திகள் என எங்கே திரும்பினாலும் நம்ம செய்தி தான்.

இந்த இலவச விளம்பரத்துக்கு நன்றி. படம் கண்டிப்பாக டிசம்பர் 20-ம் தேதி வரும்” என்று தெரிவித்தது.

இதனையடுத்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேய பாலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை.

சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது.

அந்தத் தகவல்களில் படம் 24 ஏ.எம். புரொடக்‌ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம். புரொடக்‌ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.

அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், திட்டமிட்டபடி ’ஹீரோ’ டிசம்பர் 20 முதல் திரையிக்கு வரும் என்று தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here