மனித உரிமைகள் படிப்பு

மனித உரிமைகள் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது பறிக்கப்படுகிறோ, அதையெல்லாம் பார்த்து உங்கள் மனம் சகிப்பதில்லையா? அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு மனித உரிமை படிப்பு.
ஒரு மனிதர் தன்மானத்தை இழக்கும்போது பிறர் அவரை மதிக்காமல் தாழ்வாக நடத்தும்போது, மனித மாண்பு சிதைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த அளவில் பெரியதொரு பாதிப்பை உருவாக்குகிறது. இதனால், ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதிலிருந்து மீள முடியாமல் அவர்கள் தவிப்பார்கள் இவைகள்தான் மனித உரிமை மீறல் என வரையறுக்கப்படுகிறது. மனித உரிமைகள் சம்பந்தமான படிப்பு தற்போது பெரும் முக்கியத்துவம் பெற்ற படிப்பாக விளங்குகிறது.
டிப்ளமோ, சான்றிதழ் பட்டப் படிப்பு என்று பலவகைப் படிப்புகளாக, மனித உரிமை படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான மாநில மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகள் தொடர்பான க்ரை, ஆக்ஃபார்ம், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், காமன்வெல்த் ஹியூமன் ரைட்ஸ் இனிசியேட்டிவ்ஸ், ஏசியன் சென்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ், சவுத் ஆசியன் ஹியூமன் ரைட்ஸ் டாக்குமென்டரி சென்டர் பியூசிஎல் போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள், ஐநாவின் மனித உரிமைகள் அங்கங்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறை, உலக வங்கி, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம், உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், ஐக்கிய நாடுகள் அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் இப்படி பல்வே று இடங்களில் வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது.
மனித உரிமைகள் கல்வி பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பாக கற்றுத்தரப்படுகிறது. ஆனால், சில முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சமுகத் தொண்டு நிறுவனங்கள் மனித உரிமைகள் குறித்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.
இந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் குறித்த பொதுவான அறிவும், ஆர்வமும் இருக்க வேண்டும். மனித உரிமைகள் குறித்த ஏதேனும் ஒரு படிப்பு படித்திருப்பின் உங்கள் படிப்புக்கு தகுந்தவாறு, மனித உரிமைகள் சமூக சேவகர், மனித உரிமைகள் ஆய்வாளர், நெறியாளுனர், ஆராய்ச்சியாளர், திட்ட மேலாளர், வழக்கறிஞர், மனித உரிமைகளுக்கான ஆசிரியர், மனித உரிமைகள் ஆலோசகர், மனித உரிமைகள் பற்றி பிரசாரம் மேற்கொள்பவர் என்று பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன.
மனித உரிமைகள் குறித்த பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டும் போதாது. சில அடிப்படை விஷயங்களையும் கற்றுத் தெரிந்திருக்க, தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. அதன்படி மனித உரிமைகள் படிப்பு படித்திருக்கும் ஒரு மாணவர், கண்டிப்பாக முழுவதும் அவரவர் சொந்நத மொழியில் தங்கு தடையில்லாமல் எழுததத் தெரிந்திருக்கவேண்டும். ஒரு குழுவிற்கு தலைமையேற்று நடத்திச் செல்லக்கூடிய திறன் இருக்க வேண்டும். ஒரு பிரச்சினையைப் பற்றி பத்திரிகை செய்தி வடிவில் எழுதத் தெரிந்திருக்கவேண்டும். பிரச்னை நடந்திருப்பின் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசி, உண்மை நிலையை தெரிந்துகொள்ளும் பாங்கு தெரிந்திருக்கவேண்டும்.
இதுதவிர தங்கள் தாய்மொழியைத் தவிர கூடுதலாக வேறு மொழிகள் தெரிந்திருப்பது மிக அவசியம். பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய திறமை இருக்க வேண்டும், இந்தத் திறமைகளை வளர்த்துக்கொண்டால், மனித உரிமை படிப்பு மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
மனித உரிமை குறித்த இளநிலைப் பட்டப் படிப்பு, அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வடோடோராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ரோடாக்கில் உள்ள எம்.டி. பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிலும் கற்றுத்தரப்படுகிறது.
மனித உரிமைகள் குறித்த டிப்ளமோ படிப்பு, மும்பையில் உள்ள மும்பை பல்கலைக்கழகம், நாக்பூரிலுள்ள நாக்பூர் பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்வி நிலையம், ராஜ்கோட்டில் உள்ள சௌவ்ராஷ்டிரா பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மைசூரில் உள்ள மைசூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்பை படிக்கலாம்.
சான்றிதழ் படிப்புகளை, பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் படிக்கலாம்.
வித்தியாசமான படிப்பை படித்து, படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கவும், சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய படிப்பு, மனித உரிமைகள் படிப்பு