இந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் இன்று(மார்ச் 18) மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது பெரும் விபத்து ஏற்பட்டது. ராட்சத கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூன்று பேர் மரணமடைந்தனர். திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ஷங்கர், கதாநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த விசாரணைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து விபத்து நடைபெற்ற ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதற்கு இடையே ‘போலீஸார் தன்னை நடித்துக்காட்ட சொல்லி துன்புறுத்துவதாக’ கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் காவல்துறை விசாரணைக்காக நடிகர் கமல் ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியதுடன், விசாரணைக்குத் தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல் ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டார்.

விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து கமலுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைத் தவிர்த்த மற்றவர்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இன்று(மார்ச் 18) நேரில் ஆஜராகியுள்ளனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையரும், இவ்வழக்கின் விசாரணை அதிகாரியுமான நாகஜோதி ஐபிஎஸ், இயக்குநர் ஷங்கரை விசாரித்தார். இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் ஆணைக்கு இணங்க விபத்து நடந்த இடத்தில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் விளக்கம் கேட்டு விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை, குற்றப் பிரிவு துணை ஆணையர் நாகஜோதி ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது.