டாணா புது முயற்சியா?

ஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கும் டாணா படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. கடைசியாக சிக்ஸர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் மாலைக்கண் நோயாளியாக வைபவ் தோன்றியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது டாணா திரைப்படத்தில் மீண்டும் அதேபோல் ஒரு நகைச்சுவை வேடத்தில் தோன்றியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக விரும்பும் ஒருவனுக்கு திடீரென்று கம்பீரக் குரல் மாறி, பெண் குரலில் பேசத்தொடங்கினால் என்ன ஆகும் என்ற பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்குப் பெண் குரல் இருப்பதும், பெண்களுக்கு ஆண் குரல் இருப்பதும் என இந்த கான்செப்டை வைத்து தமிழ் சினிமா போதும் போதும் என்ற அளவுக்கு கேரக்டர்களை உருவாக்கிவிட்டன.

அந்த கேரக்டர்களெல்லாம் அவமானப்படுத்துவதற்கும், நகைச்சுவை என்ற பெயரில் தனி மனிதத் தாக்குதல் நடத்துவதற்கும்தான் பயன்பட்டன. ஆனால், இப்போது ஹீரோ கேரக்டரையே இதுபோல உருவாக்கியிருப்பதால் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, பாண்டியராஜன் மற்றும் பலர் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை நோபல் மூவிஸ் தயாரிக்கிறது. குற்றம் 23, ஜில் ஜங் ஜக், ரங்கூன், சிம்பா, காளிதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

அறிமுக இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணி எழுதி இயக்குகிறார். ஜனவரி 24 அன்று மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ வெளியாக உள்ள நிலையில், முழுக்க முழுக்க குடும்பங்களைக் குறிவைத்து களமிறங்கும் டாணா நேரடி போட்டியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.