தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டு நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது வெறுப்பு அரசியலின் சாதனை என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சத்தால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், டிவி சேனல்கள் பழைய தொடர்களையும், விருது விழா நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்றன. அவ்வாறு டிவி சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பியது நடிகை ஜோதிகாவை புதிய சிக்கலில் மாட்ட வைத்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, ‘தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் உதய்பூர் அரண்மனை போன்று மிகச்சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருகிறது, ஆனால் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை வெளியில் சொல்ல முடியாத அளவு மிக மோசமான நிலையில் உள்ளது என்று கூறினார். மேலும் கோயிலுக்காக அதிகம் பணம் கொடுத்து, வண்ணம் பூசி பராமரிப்பதைப் போன்று பள்ளிக் கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையின் நிலையைப் பார்த்த பிறகு நான் கோயிலுக்குள் போகவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் பேசியது மிகப்பெரிய விவாதமாக மாறியது. அரசியல் தளத்திலும், திரைத்துறையிலும் கூட அவருக்குக் கண்டனங்கள் எழுந்து வந்தது. ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டும் சமூக வலைதளங்களில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
ஜோதிகா பேசியதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ்.ஆர்.பிரபு இது தொடர்பாக தனது முகநூல், டிவிட்டர்பக்கத்தில் ராட்சசி படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாகச் சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.