ஆயுதபூஜை அன்று உடன்பிறப்பே வெளியாகிறது

ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அக்கா, தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்

கத்துக்குட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண்கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான  கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்
அந்த வகையில், கத்துக்குட்டி பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் உடன்பிறப்பே படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில், சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோதிகா மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் இப்படத்தில் அக்கா, தம்பியாக நடித்திருக்கின்றனர்.
 இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
2டி நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்த மாதம் முதல், மாதம் ஒரு படம் என அடுத்த நான்கு மாதங்களுக்கு மொத்தம் 4 படங்கள் வெளியாகவுள்ளன.
இதில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக அமேசான் நிறுவனம்
முன்னரே அறிவித்திருந்தது
இந்த நிலையில், உடன்பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.