தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிகில் திரைப்பட தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல நடிகர் விஜய்க்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது கைதி பட ரிலீஸ் அறிவிப்பு.
“பிகில் திரைப்படம் ரிலீஸாவதில் ஆளுங்கட்சி தரப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படாது” என்று அதன் தயாரிப்பாளர் மின்னம்பலத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை தணிக்கைச் சான்றிதழ் அதிகாரபூர்வமாக கிடைத்தவுடன், புதன்கிழமை காலை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ‘அக்டோபர் 24ஆம் தேதி படம் வெளிவந்தால், தீபாவளிக்கு முன்னால் இருக்கும் மூன்று நாட்களில் சராசரியாக 75 கோடி ரூபாய் மொத்த வசூல் எடுத்துவிடலாம் என்று கணக்குபோட்டு விஜய் தரப்பிடம் சொல்லியிருக்கின்றனர்.
எனவே, எப்போதும் முதலில் டிக்கெட் வியாபாரத்தை கவனிக்கும் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்ய தயாரானார்கள்.
மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களும் தீபாவளியன்று வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோன்று பிகில் படமும் தீபாவளி அன்று ரீலீஸ் செய்யப்பட வேண்டும் என்று விஜய் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாள் என்பது தமிழ்சினிமாவில் அதிகபட்சமாக பண வசூலை எடுக்கக்கூடிய பண்டிகை என்பது எல்லோருக்கும் தெரியும்.

தீபாவளி பந்தயத்தில் விஜய்க்கு எதிராக புதிய படத்தை ரிலீஸ் செய்யமாட்டார்கள் என்பதால் இரண்டு மாதங்களுக்கு முன்பு கைதி தீபாவளி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பிகில் திரைப்படம் அக்டோபர் 24 வந்துவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து கைதி படத்தை வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பாளர்கள் இருந்தனர். பிகில் பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்காத சூழ்நிலையில் 18.10.2019 அன்று மாலை 5 மணிக்கு அக்டோபர் 25 முதல் கைதி ரிலீஸ் என்று அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்ஆர் பிரபு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கின்றனர்.
அதற்குப் பின்னரே குழப்பத்திற்கு முடிவுகட்டி தூக்கத்தை கலைத்து விழித்துப் பார்த்த பிகில் படக்குழு, ‘இனியும் நாம் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் மௌனம் காப்பது சரியாக வராது’ என்று கருதியதால் நேற்றைய தினம்(18.10.2019) மாலை 6 மணிக்கு பிகில் அக்டோபர் 25அன்று ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பேசி ரிலீஸ் தேதியை முடிவு செய்திருந்தால் இரண்டு படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது.
குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளியில் படங்களை செய்திருந்தால் முதல் நாள் ஓப்பனிங் வசூல் பாதிப்பு ஏற்படாமல் அதிகபட்சமாக பிகில் படத்திற்குக் கிடைத்திருக்கும்.
அதேபோன்று சில தினங்கள் கழித்து வெளியாகும் கைதி படத்துக்கும் புதிய படம் என்கிற அடிப்படையில் ஓப்பனிங் வசூல் அதிகமாகக் கிடைத்திருக்கும். இப்பொழுது இரண்டு படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதுவதால் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப பங்கிட்டு கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது