கமலின் நம்பிக்கைப் பாடல்

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் ஊட்டும் விதமாக கமல்ஹாசன் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா வைரஸ் தொற்றினைக் கையாளும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனது சமூக வலைதளப்பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவரது யோசனைகளும், பதிவுகளும் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துவருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறித்த அச்சத்தாலும், ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளாலும் வேதனையில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அவர் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.

மக்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் படியான அந்தப்பாடலுக்கு ‘அறிவும் அன்பும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கமல்ஹாசன் பாடி, இயக்கியிருக்கும் இந்தப்பாடலில் அவருடன் இணைந்து அனிருத் ரவிச்சந்திரன், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம் மற்றும் முகேன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப்பாடலுக்கு இத்தனை பெரிய கலைஞர்களை ஒன்றிணைத்தது எப்படி என்று திரு.கமல் ஹாசன் அவர்களிடம் கேட்டதற்கு, ‘இது ஒரு உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்தது. நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத்தினால் அவர் அவர் பாடும் பகுதிகளை தனியாக படம் பிடித்தனர்.

இப்படி அவர்களாகவே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்கு தெரியவில்லை’ என்று கூறினார்.

மேலும், ’உச்சகட்ட தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொளிகளை எங்களுக்கு அனுப்பி வைக்க, அதை நாங்கள் ஒன்றாகத் தொகுத்தோம்.

நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார், மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர். இந்த கூட்டமைப்பு, நமது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற்றும். கலைஞர்கள் எப்பொழுதும் மக்களிடையே நம்பிக்கையை விதைப்பவர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலை கடக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும்.”என அவர் குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் பாடல் குறித்துப் பேசும் போது, “கூட்டு முயற்சியால் எடுக்கப்பட்ட இப்பாடல் கண்டிப்பாக இது போன்ற கடினமான சூழலை வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையளிக்கிறது” என்று கூறினார். மேலும், “கொரோனா தொற்று இருக்கின்ற ஒரு காலத்தில் கூட மனிதர்கள் கூட்டாக நினைத்தால், முயற்சி எடுத்தால் இது போன்ற இன்னும் பல வெற்றிகளை பெற முடியும் என்கின்ற நம்பிக்கை வருகிறது. இப்பாடல் இவ்வளவு சிறப்பாக வெளிவந்திருப்பதற்கு காரணமான அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏனெனில் நான் ஒரே முறை தொலைபேசியில் அழைத்த உடனேயே ஒத்துக்கொண்டு தங்கள் பங்கினை முடித்துக் கொடுத்தனர். மிக முக்கியமாக கோரஸ் பாடிய பாடகர்கள் என்னுடன் வேலை செய்ய ஒப்புக்கொண்டதற்கும், சிறப்பாக பணியாற்றியமைக்கும் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்த கொரோனோ தொற்று முடிந்த பின் வாழவிருக்கும் புதிய உலகில் புதிய வாழ்க்கையை துவங்கவிருக்கும் நம் அனைவருக்கும் இப்பாடலை நான் சமர்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது” என்று ஜிப்ரன் கூறினார்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப்பாடலுக்கு மஹேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். பங்கேற்ற அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பாடலைப் பாடியுள்ளனர். திங்க் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்தப்பாடல் நாளை(ஏப்ரல் 23) வெளிவர இருக்கிறது.