ரஜினியுடன் பேசிகொண்டிருக்கிறேன்!!! – கமல்

ரஜினியுடன் இணைந்து செயல்படுவதற்கு அவரிடம் தொடர்ந்து பேசி வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சூசகமாகத் தெரிவித்துள்ளர்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில், ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் இருவரும் இணைந்து அரசியலிலும் செயல்படுவார்களா என்ற கேள்வியும் விவாதமும் தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 9) சென்னையில் தி அல்ஜிப்ரா- கிளப் நடத்திய ஓர் உரையாடலில் மூத்த பத்திரிகையாளர் ஹிந்து என்.ராமுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது சமீபத்தில் நடந்த நிகழ்வில் ரஜினி-கமல் இருவரின் சகோதரத்துவம் பற்றி பேசப்பட்டது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன்,

“ரஜினிகாந்த் பெருமை மிகிந்த ஒரு தமிழன். அவர் அனைத்தையும் தமிழகத்துக்காகவே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் அடிப்படையில் அவரை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்வேன்.அவரும் அந்த மனநிலையில்தான் இருக்கிறார்” என்றார்.

திராவிட அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல், “ஒரு காலத்தில் திராவிட அரசியல் தமிழகத்தின் அன்றைய தேவையாக இருந்தது. காலத்தின் தேவையாக இருந்த திராவிட அரசியல் சிலரின் தேவையாக பிறகு மாறிவிட்டது. திராவிட அரசியல் தமிழகத்துக்கு தேவைதான். ஆனால் அது சரியான திசையில் செலுத்தப்பட வேண்டியதாக இருக்க வேண்டும்”என்றார்.

ஹேராம் படம் எடுக்கும்போதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கும் கமல், இன்றுள்ள அரசியல் சூழ்நிலையை நாடு அடைவது குறித்து அந்த நேரத்தில் தான் கண்ட அறிகுறிகள் அந்த திரைப்படத்தை உருவாக்கத் தூண்டின என்றார். மேலும், இப்போதைய சூழலில் ஹேராம் திரைப்படத்தை எடுப்பது கடினமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார் கமல்.