இந்தியன் 2 விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்குப் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் அமைந்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்று வந்த படப்பிடிப்புக்கு இடையே கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. பெரும் இழப்புகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரொடக்ஷன் அசிஸ்டெண்ட் மது, ஆர்ட் அசிஸ்டெண்ட் சந்திரன் என மூன்று பேர் மரணமடைந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் (சிசிபி) விசாரித்துவரும் நிலையில் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விபத்து தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இன்றுசென்னை வேப்பரியில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்து நடப்பதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னால் கமல், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தனர்.