பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கும் கார்த்தி

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது.
அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.அங்கும் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.

அதனால் பொன்னியின் செல்வன் வேலைகளும் நின்று போயின.
இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வந்தார்கள். அதற்காக இலங்கை சென்று படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் மணிரத்னம் திட்டமிட்டாராம்.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டனர். அதுவும் கடைசி நேரத்தில் தடைபட்டது.

அதன்பின், இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மைசூரில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு அங்கு போய் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைப் பார்த்து வந்தார்கள்.அங்கு நினைத்தபடி இடங்கள் அமைந்ததால் நவம்பர் 16 முதல் அங்குபோய் படப்பிடிப்பைத் தொடங்கவிருந்தார்கள்.

ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்குக் காரணம் மைசூரில் இவர்கள் கேட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம்.
அதனால் அதற்கு ஈடான வேறு இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.
எப்படியும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில்தான் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

இதில் பெரிய சோகம் என்னவென்றால் கார்த்தியிடம் வாங்கியதேதிகள்வீணாவதுதானாம்.இதை முடித்துவிட்டு பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள வேண்டும். இப்போது இது தாமதமாவதால் அதுவும் தாமதமாகலாம் என்கிறார்கள்.