காற்றுக்கில்லை கறுப்பு-வெள்ளை கவிஞர் வைரமுத்து

அமெரிக்காவில், போலீஸ் அதிகாரியால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

மே மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்று 46 வயது நபர் மரணமடைந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் டெர்ரக் சவுவின்(44) என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் ஃபிளாய்ட்டை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தார். அந்த அதிகாரி ஃபிளாய்ட்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் தனது காலை வைத்து பலமாக அழுத்தினார். அதில் ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’என்று தனது கடைசி வார்த்தைகளை மொழிந்து ஃபிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

மனிதம் மரணித்துப்போன இந்த கொடும் செயலுக்கு ஃபிளாய்ட்டின் நிறமும், இனமும் ஒரு காரணமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. ‘கறுப்பாய் பிறந்தால் இந்த மண்ணில் வாழ உரிமை இல்லையா?’ என்ற கண்டன முழக்கங்கள் அமெரிக்க வீதிகள் துவங்கி உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது. உலக அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த ஃபிளாய்ட்டின் மரண சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நிற வெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாகவும், உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டை நினைகூறும் வகையிலும் கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். ‘காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’என்ற இந்தப்பாடல் நேற்று(ஜூன் 10) யூட்யூப்பில் வெளியானது.

“காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்

மூச்சுவிட முடியவில்லை

என் காற்றின் கழுத்தில் – யார்

கால்வைத்து அழுத்துவது?

சுவாசக் குழாயில் – யார்

சுவர் ஒன்றை எழுப்பியது?

எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?

எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?

ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?

தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?

காக்கையும் உயிரினம்

கருமையும் ஒரு நிறம்

எல்லா மனிதரும் ஒரே தரம்

எண்ணிப்பாரு ஒரு தரம்

மாளிகை நிறத்தை மாற்றுங்கள் – ஒரு

பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்

நீங்கள் பகல் நாங்கள் இரவு

இரண்டும் இல்லையேல் காலமே இல்லை

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்

மூச்சுவிட முடியவில்லை!”

என்று வரிகள் அமைக்கப்பட்டுள்ள வைரமுத்துவின் பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்.

இந்தப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.