மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ்

பல முன்னணி நடிகர்களின் நடிப்பில், நூறு கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘மரைக்கார்: அரபிக்கடலின்றே சிங்கம்’.

மோகன்லால் கதாநாயகனாக நடித்து, ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘ஆர்ச்சா’ என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேடத்தில் நடிக்கிறார். அது தொடர்பான போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில், நடிகர் மோகன்லால் அவரது மகன் பிரணவ் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.

மேலும் அசுரன் படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மஞ்சு வாரியார், ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், சுனில் ஷெட்டி, சுஹாசினி, சித்திக் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இணைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகை நஸ்ரியாவின் மாமனாருமான ஃபாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறும் கற்பனையும் கலந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து பல தென்னிந்திய, பாலிவுட், பிரிட்டிஷ் மற்றும் சைனீஸ் நடிகர்களும் நடிக்கின்றனர். ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் 2020 மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷின் கெட்அப் மற்றும் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.