சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த ‘சத்ரியன்’ போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
தற்போது ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் மூலமாக சசிகுமார் – எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரேதன் சினிமா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது.
படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சசிகுமார் தற்போது நாடோடிகள்-2, எம்.ஜி.ஆர் மகன் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.