LGM-திரை விமர்சனம்

திருமணத்திற்குப் பிறகு தன் தாயும், தன் மனைவியும் சண்டையின்றி ஒன்றாய் வாழ ஒருவன் ஃபேமிலி டிரிப் அடித்து ஒத்திகை பார்த்தால் என்ன நடக்கும் என்பதே தோனி தயாரித்திருக்கும் Lets Get Married LGM படத்தின் ஒன்லைன்
கௌதமும் (ஹரிஷ் கல்யாண்) மீராவும் (இவானா) இரண்டு ஆண்டுகள் காதலிக்கிறார்கள். முரட்டு இன்ட்ரோவெர்ட்டான கௌதம் தயங்கி தயங்கி திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்க, அசால்ட்டாக ஓக்கே என்கிறார் மீரா. கௌதம் அம்மாவான நதியாவாவாது யார் என்ன என விசாக்கிறார். மீரா வீட்டிலோ ‘ ஐ ஜாலி ‘ என புது காஸ்டியூம் மாட்டிக்கொண்டு சம்பந்தம் பேச ஆயுத்தமாகிறார்கள். திருமணம் முடிந்ததும் எக்ஸ்டிரா லக்கேஜாக வரப்போகும் கௌதமின் தாயாரை மீராவுக்கு பிடிக்கவில்லை. எப்படி திருமணம் செய்துகொள்ள இரண்டாடுகள் பழகிப் பார்த்தார்களோ அது போல மாமியாருடன் செட் ஆகுமா இல்லை என்பதைப் பார்க்க ஒரு ஜாலி டிரிப் போகலாம் என ஐடியா தருகிறார் மீரா. அந்த ஜாலி டிரிப்பில் என்ன நடக்கிறது நாம் என்ன ஆனோம் என்பது LGM படத்தின் மீதிக்கதை.

இதுதான் கதை என்பதை இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்த அனைவருமே யூகிக்க முடியும். அப்படியானதொரு ஜாலியான ஒன்லைன் கொண்ட ஒரு டிரெய்லரைத்தான் கட் செய்திருந்தார்கள். சரி, யோகி பாபு இருக்கிறார். ஒரு நாலு பாடி ஷேமிங் ஜோக் வரும். அதில் இரண்டுக்கு சிரிப்பு வரும். ஆர்ஜே விஜய் இருக்கிறார். அவரும் ஏதாவது பேசிக்கொண்டு வருவார். நதியா இருக்கிறார். நதியா இவானா சண்டைகள் நடக்கும். டிரெய்லரில் புலி எல்லாம் வருகிறது. அதனால் காட்டுக்குள்ள புலி டைப்பில் நான்கு காட்சிகள் இருக்கும்.

தோனி வேறு தயாரித்திருக்கிறார். ‘என் ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்கிற பாசத்தலைவன் அவர். அதனாலேயே தன் தயாரிப்பில் முதல் படத்தை தமிழில் எடுத்திருக்கிறார். ஜாலியான கல கல ரெய்டாக இல்லாவிட்டாலும் டிராஃபிக் இல்லாத ரோட்டில் செல்லுமளவு நிம்மதியான ரெய்டாக இருக்கும் என நம்பி படம் பார்த்தவர்களைப் போட்டு புரட்டி எடுத்திருக்கிறது படக்குழு.
தன் இரண்டாண்டு காதல் கதையை நண்பர்கள் RJ விஜய், விக்கல்ஸ் டீமிடம் சொல்கிறார் ஹரிஷ் கல்யாண். அவர்கள் தூங்கி வழிந்தபடி கேட்கிறார்கள். அதன் பிறகு அந்தக் கதையை 20 நிமிடங்கள் கழித்து டீம் லீடு வெங்கட் பிரபுவிடம் சொல்கிறார். “இப்படி ஒரு மொக்கை கதையாடா” என வெங்கட் பிரபுவே ஷாக் ஆகிறார். அப்போது நமக்கு இரண்டாம் முறையாக அந்தக் காட்சிகள் ஃபாஸ்ட் பார்வர்டில் போட்டுக் காட்டப்படுகிறது. அடுத்த இருபது நிமிடங்கள் சில காட்சிகள். பிறகு அந்த கதையை வேன் டிரைவர் யோகி பாபுவிடம் சொல்கிறார். இதுவரை சிகரெட் பிடிக்காத என்னையே சிகரெட் பிடிக்க வச்சுட்டீல என யோகி பாபு காண்டாகிறார். இப்போது மீண்டும் அந்த காட்சிகள் நமக்கு ஃபாஸ்ட் பார்வர்டில் காட்டப்படுகிறது. பிறகு காவல்துறை அதிகாரி VTV கணேஷிடம் அந்தக் கதையை சொல்கிறார். மறுபடியும்….. …. ….. …. .. …. . நாம் யோகி பாபு நிலைமைக்கு போய்விடுகிறோம். உண்மையில் ‘ ச்ச இவ்ளோ கேவலமா இருக்கே இன்னுமா இதைய பார்க்கிறீங்க ‘ என்பதைத்தான் வெங்கட் பிரபுவும், யோகி பாபுவும், VTV கணேஷும் நமக்கு அசரீரி ரூபத்தில் வந்து சொல்கிறார்கள். நம் மர மண்டைக்கு அது புரியத்தான் சற்று தாமதமாகிவிடுகிறது.

ஒன்லைன் கூட இல்லை, அரை லைனை வைத்து வாங்க ஜாலியாக என்னத்தையாவது எடுப்போம் மைண்ட் செட்டில் நகர்கிறது திரைக்கதை. இவ்வளவு மெத்தனமாக மோசமாக எழுதப்பட்ட திரைக்கதையை சமீபத்தில் கண்டதில்லை. அமேச்சூர் மேக்கிங் வகை சினிமாக்கள் தனி. ஏதோ ஆர்வக்கோளாறில் படமெடுப்பார்கள். ஆனால், இது அப்படிப்பட்ட சினிமா இல்லை. சம்பந்தமே இல்லாமல் வரும் நபர்கள் நம்மை டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறார்கள். சாண்டியை வைத்து வரும் சாமியார் போர்ஷன் எல்லாம் கும்பிபாக லெவல். குதிரைக்கு போதை ஜிலேபி கொடுப்பதால் தறி கெட்டு ஓடுவிடுகிறதாம். அதையாவது கொடுங்கடா திரைக்கதை நகருதான்னு பார்ப்போம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.எதையாவது எடுத்து வைப்போம். டொட்டொய்ன் என பின்னணி இசையை வைத்து நிரப்பிக்கொள்ளலாம் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் படம் முழுக்க இருக்கிறது. ‘மனித உயிர்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

சில கதாபாத்திரங்கள் தடாலடியாக உள்ளே வருகின்றன. ஏன் வருகிறார்கள் எதற்கு வருகிறார்கள் என மருந்துக்குக்கூட ஒரு லாஜிக் கிடையாது. சரி, லாஜிக் கிடக்குது கெரகம். சுவாரஸ்யமாகவாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. க்ரீன் மேட் என்னும் தொழில்நுட்பத்தை இந்தப் படம் அளவுக்கு பாடாவதியாக பயன்படுத்திய சினிமாவைக் கண்டதில்லை. ஸ்டூடியோவுக்குள் எடுக்கப்பட்டது என அப்பட்டமாக தெரியும்படி எடுத்திருக்கிறார்கள்.

மாமியார் மருமகள் முதல்முறையாக சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கான காட்சிகள் அதில் சண்டைகள் என்பதுதான் லைன் என்றானபின் சிறிதளவேனும் சிரத்தை எடுத்து எதையாவது எழுதி இருக்கலாம். ஒரு படத்தில் ஆங்காங்கே ஒப்பேத்தல்கள் இருக்கலாம் . முழு படத்தையும் ஒப்பேத்தினால் எப்படி பாஸ். சில படங்கள் மொக்கையாக அமைந்துவிடும். ஆனால், சில படங்கள் மொக்கை என்பதைத்தாண்டி ஒருவித டார்ச்சர் செய்யும். அப்படியானதொரு சினிமாவாக LGM நீண்டுவிடுகிறது என்பது தான் அவல நிலை.
யோகி பாபுவும் இவானாவை பென்சில் குச்சி டைப்பில் என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார்கள். டெத் பெட்டில் படுத்திருக்கும் நமக்குத்தான் சிரிப்பு என்பது வர மறுக்கிறது.
ஒரு வரிகூட புரியாமல் மதன் கார்க்கி எழுதிய இஸ் கிஸ் கிஃபா பாடல் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல்.
படத்தின் VFX பொறுப்பு, கதை, திரைக்கதை , இசை எல்லாமே ரமேஷ் தமிழ்மணி தான். நல்லதொரு வாய்ப்பை வீணடித்துவிட்டீர்களே ரமேஷ். அடுத்தடுத்த படைப்புகளில் சிறப்பாக வர வாழ்த்துகள். அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு அசைன்மென்ட் கொடுத்தது போல, தோனிக்கு யாராவது அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார்களா என்கிற சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.