விஜய் பிறந்தநாளன்று மாஸ்டர் ரிலீஸ்

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

கொரானோ ஊரடங்கு விதிக்கப்படாமல் இருந்தால் இப்படம் கடந்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்கும். ஆனால், மே 3 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் படம் எப்போது வெளி வரும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மே மாதம் 10ம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள் நடக்க உள்ளன. அதன்பின் ஜுன் மாதத்தில் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும். அது முடிவதற்கே 15 நாட்கள் ஆகிவிடும்.

எனவே, ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று படத்தை வெளியிடலாமா என தயாரிப்பாளர் தரப்பில் யோசித்து வருகிறார்களாம். அன்றே வெளியிட்டால் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுதான் காரணமாம்.

ஆனால், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. மே மாதம் கூட திறக்கப்பட மாட்டாது என்றே சொல்லி வருகிறார்கள். அரசு ஒரு முடிவு எடுத்தபின் ‘மாஸ்டர்’ படத்தின் டிரைலரை வெளியிடும் போது படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்க உள்ளார்களாம்.