கார்த்திக் ராஜாவுடன் இணக்கம் இளையராஜாவுடன் சுணக்கம் – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இயலாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

மிஷ்கின் இப்போது, சிம்பு நடிக்கும் புதிய படம் அல்லது அருண்விஜய் நடிப்பில் அஞ்சாதே 2 ஆகிய இரண்டில் ஏதாவதொன்றைத் தொடங்க முயன்று கொண்டிருக்கிறார்.

அப்படங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், எந்தப்படம் தொடங்கினாலும் அந்தப்படத்துக்கு இசை கார்த்திக்ராஜாதான் என்று சொல்லிவிட்டாராம்.

இளையராஜாவுடன் பணியாற்றிய நேரங்களில் கார்த்திக்ராஜாவின் திறமையை அறிந்துகொண்டேன். அவர் நல்ல பாடல்களையும் சிறந்த பின்னணி இசையையும் தருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அதனாலேயே அவரை என் படங்களுக்கு இசையமைக்க வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் மிஷ்கின் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.