நிவேதா பெத்துராஜ் மறுபிரவேஷம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒரு அலை போல வருவதும், சில வருடங்களில் காணாமல் போவதும் புதிதல்ல. ஆனால், அந்தப் பட்டியலுக்குள் நான் வரமாட்டேன் என்பதுபோல திரும்ப வந்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானபோது நிவேதா பெத்துராஜுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு இல்லை. துபாயிலிருந்து வந்த நடிகை என்பது மட்டுமே அவரது விலாசமாக இருந்தது. ஆனால் படம் வெற்றிபெற்றது.

அவரது கேரக்டரும் பேசப்பட்டது. அதன்பின் அவர் கொடுத்த பேட்டிகளின்போது தான் ரசிகர்களுக்கே ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம், அவ்வளவு சரளமாக தமிழ் பேசினார் நிவேதா. இதுபற்றி விசாரித்தபோது தான், மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டு அங்கேயே பிறந்தவர் நிவேதா என்பதும், 10 வயதில் குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்து அங்கு மிகப்பெரிய மாடலாக உருவாகி துபாய்க்கான மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றவர் என்ற உண்மை ரசிகர்களுக்குத் தெரியவந்தது.

பளிச் என்ற முகத்தோற்றம் இல்லையென்றாலும், தமிழ் மண்ணுக்கே உரிய நிறமும், முக வாகும் நிவேதாவை அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆக வைத்தது. பொதுவாக என் மனசு தங்கம், சங்கத் தமிழன் ஆகிய கிராமத்து சப்ஜெக்ட்களில் நடித்தார்.

அதேசமயம் தமிழின் முதல் விண்வெளித் திரைப்படமான டிக் டிக் டிக் படத்திலும் நடித்தார். இந்தப் படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் நிவேதாவுக்கு வெற்றிகள் கிடைத்தன.
தமிழில் வெற்றிபெற முடியாத நிவேதாவின் நிலையை ட்விட்டரில் பலரும் தொடர்ந்து கிண்டல் செய்து மீம்களை உருவாக்க, முழுவதும் நெகட்டிவ் மக்களாக இருக்கிறார்கள் என்று கூறி 2018ஆம் ஆண்டு ட்விட்டரிலிருந்து வெளியேறினார் நிவேதா.
இன்ஸ்டாகிராமில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு வைத்துக்கொண்டு தினமும் படங்களை பதிவேற்றி வந்தார். அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அவரது இன்ஸ்டாகிராம் படங்கள் ரசிகர்களது மனதை வென்றன.
ரம்யா பாண்டியனெல்லாம் சமீபகால டிரெண்டிங் தானே தவிர, இன்ஸ்டாகிராமில் கடந்த 6 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் நிவேதா. இதுவரையிலும் இருபது லட்சம் பேர் அவரைப் பின் தொடர்கின்றனர். ஆனாலும், என்ன நினைத்தாரோ இப்போது மீண்டும் ட்விட்டரில் @Nivetha-tweets என்ற பெயரில் புதிய கணக்கைத் தொடங்கியிருக்கிறார்.

நிவேதாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி மற்றும் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ள ஜகஜால கில்லாடி ஆகிய படங்கள் 2020ஆம் ஆண்டு ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்தப் படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகையான நிவேதாவுக்கான மார்க்கெட் மீண்டும் மேலே வரும். அதற்கான ஒரு ஏற்பாடாகவும் நிவேதாவின் ட்விட்டர் வரவு இருக்கலாம் என்கின்றனர் திரைத் துறையினர். எது எப்படி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் பார்த்தவற்றைவிட மேலும் சில படங்கள் மற்றும் வீடியோக்களை இனி ட்விட்டரில் பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
மிகவும் தீவிரமான உடற்பயிற்சியாளரான நிவேதா, கொரோனா லாக்-டவுனில் இருக்கும்போது ரசிகர்களுக்கு உயற்பயிற்சி செய்யக் கற்றுக்கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.