தமிழ் சினிமாவில் மீண்டும் வேலைநிறுத்தம்

வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரைப்படங்களை திரையரங்குகளுக்கு விநியோகம் செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படவிநியோகஸ்தர்கள்  கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சென்னை-காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான டி.ராஜேந்தர் அவர்கள் இன்று(மார்ச் 10) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, “பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள சங்க உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து தலையாய முடிவு ஒன்றை எடுத்துள்ளோம். ஏற்கனவே பாரதப் பிரதமர் GST கொண்டு வரும் பொழுது நாடு முழுவதும் ஒரே வரி தான் என்று கூறினார்.

ஆனால் அதுவே எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு திரைப்படம் எடுப்பதற்கு முன்பாகவே 18% வரி கொடுப்பது எங்களுக்கு பெரிய சுமையாக இருந்தது.

திரைத்துறை ஒரு அங்கீரிக்கப்பட்ட தொழில்துறையாக மாற்றப்படவில்லை. வங்கிக்கு சென்றால் கடன் அளிக்க மாட்டார்கள். நாங்கள் கோடி கோடியாகப் பணம் போட்டு படம் எடுக்க வேண்டும், வரி செலுத்த வேண்டும், ஜிஎஸ்டி செலுத்த வேண்டும், டிடிஎஸ் செலுத்த வேண்டும், இன்கம்டாக்ஸ் செலுத்த வேண்டும்.

எல்லாம் செய்தும் திரையரங்குகளுக்கு மக்களை வரவழைக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்ய வேண்டும். ஆனால் இத்தனையும் செய்தாலும் எங்கள் திரைப்படங்களை காப்பிரைட் இல்லாமல் திருட்டுத்தனமாக சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
அதனைத் தட்டிக்கேட்க சட்டம் இருந்தாலும் அந்த சட்டத்தை நிறைவேற்ற யாரும் இல்லாத நிலை நிலவிவருகிறது.

இன்று தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஏதேனும் ஓரிரு திரைப்படங்கள் ஓடி அதன் மூலம் பணம் பெற்றவர்களை அதிர்ஷ்டசாலிகளாகவே பார்க்கிறார்கள்.

இதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில் இரு விஷயங்களை மட்டும் நாங்கள் தீர்மானமாக எடுத்துள்ளோம்.” என்று கூறினார்.

அதன்படி“விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27-ஆம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

தற்போது திரையரங்கநுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது.

ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என்று விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் குறித்து டி.ஆர் பேசும் போதும் “நாட்டு மக்களை கொரோனா வைரஸ் வாட்டி வதைக்கிறது என்றால், எங்களுக்கு டிடிஎஸ் தான் பெரிய வைரஸ்” என்று கூறினார். மேலும் திரைத்துறையில் இருந்து தமிழக முதலமைச்சர்களாக மாறிய எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையினரின் வளர்ச்சிக்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் வழியில் ஆட்சி செய்யும் தமிழக அரசும் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.