சொந்தமாய் தொழில் தொடங்கலாம்!

தேவையும், அது சார்ந்த சந்தை மதிப்பும்தான் சொந்த தொழில் தொடங்குவதற்கான அடிப்படை விஷயங்கள். இவைகள் சரியாக நீங்கள் கணிக்கத் தொடங்கிவிட்டால், நிச்சயம் நீங்களும் தொழிலதிபர்தான். அந்த வகையில் மக்களுக்கான அத்தியாவசியமான தேவைகள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கான தொழில் யோசனையை தேர்வு செய்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு திட்ட மதிப்பீட்டை தயார் செய்யுங்கள். திட்ட மதிப்பீடு செய்தவுடன், கொள்முதல், சந்தை நிலவரங்கள் இவற்றை கள ஆய்வு செய்யுங்கள். இவையாவும்தான் உங்கள் கனவை பலிக்கச் செய்யும் காரணிகளாக இருக்கும்.
சர்க்கரை வியாதி இப்போது பாரபட்சமில்லாமல், பணக்காரர்கள் ஆரம்பித்து பாட்டாளிகள் வரையிலும், இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சர்வசாதாரணமாய் பாடாய்படுத்தும் வியாதியாக இருக்கிறது. இந்த நோய்களுக்கு தீர்வு என்பதைவிட உணவு கட்டுப்பாட்டுக்கு கூறப்படும் விஷயம் கோதுமைதான். அரிசி சார்ந்த உணவு பதார்த்தங்களை குறைத்துக்கொண்டு, கோதுமை வகையறாக்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளச்சொல்லி மருத்துவர்கள் அறிவுருத்துவது எல்லோரும் அறிந்ததே. இது ஒரு வகையென்றால், கோதுமை உணவுப்பொருள் இப்போது எல்லோர் வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாகவும் இருக்கிறது.
மக்கள் மத்தியில் அதிக தேவையுடன் இருக்கும் இந்த கோதுமைதான் உங்கள் தொழிலுக்கான அடிப்படை ஆதாரம். சந்தையில் பல்வேறு விதமான கோதுமை மாவுகள் கிடைக்கின்றன. பல நிறுவனங்கள் கோதுமை மாவு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. விதவிதமான பேக்கிங் பல்வேறு வகையான வர்த்தக விளம்பரங்கள் மூலம் மக்களை வசிகரித்து வருகின்றன. இந்தியாவில் கோதுமை மாவு சார்ந்த வர்த்தக விளம்பரங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது என்பது ஆச்சர்யப்படும் ஒன்று. ஏனெனில் அந்தளவிற்கு கோதுமை மாவிற்கு சந்தை இருக்கிறது.
சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவு பாக்கெட்டை பொருத்தவரையில் விலையின் அடிப்படையில்தான் மக்களின் தேர்வு இருக்கிறது. என்னதான் தரமாக இருந்தாலும், நியாயமற்ற விலையாக இருக்கும்பட்சத்தில் அதை மக்கள் வெறுக்கவே செய்கிறார்கள். விலைவாசி காரணமாய் மக்கள் நேரடியாக கோதுமையை விலைக்கு வாங்கி சுத்தம் செய்து, அதை மாவு எந்திரத்தில் கொடுத்து அரைத்து பயன்படுத்தவும் செய்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு எப்போதும் கோதுமை மாவு மிகவும் அவசியமாய் இருக்கிறது என்பது இதன்மூலம் புலனாகிறது. இதுதான் உங்களுக்கான களம். நீங்கள் செய்யவேண்டியது இதுதான். தரமான கோதுமையை முதலில் கொள்முதல் செய்யவேண்டும். அதை மூன்று கட்டமாக சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் அதை மாவாக்கி, பாக்கெட்டில் அடைத்து சந்தையில் விற்பனை செய்யவேண்டும். இதுதான் உங்களுக்கான தொழில். இதுதான் ஏற்கெனவே சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்கிறதே. இதையே எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் உங்களுக்குள் ஏற்படுவது இயற்கைதான். சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவின் தரம், மக்கள் அந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அந்த மாவில் இருக்கும் குணாதிசயம் இவற்றை மொத்தமாக மதிப்பிடுங்கள்.
இனி கோதுமையை மொத்தமாக கொள்முதல் செய்வது எப்படி, அதற்கான மூலதனம் எவ்வளவு செலவாகும்? அதை சுத்தப்படுத்தி, மாவாக்கி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும்போது அடக்கவிலை இதை தீர்மானித்துவிட்டு, சந்தையில் கிடைக்கும் மற்ற நிறுவனங்களின் உற்பத்தியைவிட எவ்வளவு குறைச்சலாக விற்பனைக்கு அனுப்ப முடியும் என்பதை தீர்மானியுங்கள். மற்ற உற்பத்தி நிறுவனங்களை விட உங்களது தயாரிப்பு குறைந்த விலையில் விற்க முடியும், தரமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், நிச்சயம் நீங்கள் தேர்வு செய்திருக்கும் இந்தத் தொழிலில் சாதித்துவிட முடியும்.
கோதுமை மாவு மட்டுமல்லாமல், அரிசி மாவு, கேழ்வரகு மாவு என்று பல்வேறு வகையில் உற்பத்தியை தொடங்கிவிடலாமே என்ற யோசனை உங்களுக்கு வருமானால், கண்டிப்பாக அந்த யோசனையை ஓரம்கட்டிவிடுங்கள். ஏனெனில் ஒரு தொழிலில் ஒரு உற்பத்தியை சந்தைப்படுத்துதலில் சாதனை செய்தபிற்பாடு, அதன்மூலம் வருவாய் ஈட்டி லாபம் சந்தித்த பிற்பாடு அடுத்த யோசனைக்குள் அடியெடுத்து வையுங்கள். சமூகத்தில் பல தொழில்முனைவோர் தன் தொழிலில் தோல்வியை தழுவுவதற்கு மூலக்காரணமே உறுதியற்ற மனநிலைதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்தத் தொழிலில் தற்போது இருக்கும் நடைமுறை என்ன? மக்கள் எந்தவகையான மாவை அதிகப்படியாக விரும்புகிறார்கள் என்பது போன்ற கள ஆய்வில் முதலில் ஈடுபட்ட பிற்பாடு, திட்ட மதிப்பீட்டில் இறங்குங்கள். அப்பறம் என்ன நிச்சயம் வெற்றிதான்!
இந்த தொழில் தொடங்க தேவைப்படும் உபகரணங்கள்:
· கிளீனிங் மெஷின்
· வாஷிங் லைன்
· மைக்ரோனைசர்
· பேக்கிங் மெஷின்
மூலப்பொருள்கள்:
· கோதுமை
· பேக்கிங் மூலப்பொருட்கள்
இந்தத் தொழில் தொடங்குவதற்கு 200 சதுர அடி இடம் போதும். இந்தத் தொழில் தொடங்குவதற்கு வேலை தெரிந்தவர்கள் மூன்று பேரும், புதியவர்கள் 5 பேரையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்களை சந்தைப்படுத்துதலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தொழில் தொடங்குவதற்கும் மூன்று மாதத்திற்கு இடத்தின் வாடகை வேலைப் பார்க்கும் பணியாளர்களின் ஊதியம், மின்சார செலவு, உற்பத்தி செலவு, மூலதனம் இவற்றையெல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதலீடு இருந்தால், இந்தத் தொழிலில் பெரிய அளவில் சாதிக்க முடியும்.
20 லட்சம் முதலீடா? என்று வாயைப் பிளக்க வேண்டாம். உங்களது திட்டம், அதை சந்தைப்படுத்துதல் யோசனை, உத்தேச வியாபார விகிதம் இவற்றையெல்லாம் ஒரு திட்டவரைவாக தயார் செய்து வங்கியில் கொடுத்தால் வங்கிக் கடனை பெற முடியும். வங்கிக் கடனைக் கடந்து நீங்கள் முதலீடு செய்யும் பணம் சொர்பமாக மட்டுமே இருக்கும்.
நம்பிக்கையுடன் தொழில் செய்ய திட்டமிட்டால் வெற்றி நிச்சயம். அடுத்தவாரம் அடுத்த தொழில் யோசனையில் சந்திக்கலாம்.