படப்பிடிப்பு அரசுக்கு தெரிவிக்கவேண்டும் – கடம்பூர் ராஜு

‘அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் விபத்து ஏற்படுகின்றது’ என இந்தியன் 2 விபத்து குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில், உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரொடக்‌ஷன் அசிஸ்டெண்ட் மது, ஆர்ட் அசிஸ்டெண்ட் சந்திரன் என மூன்று பேர் இந்த விபத்தில் மரணமடைந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட படக்குழுவினர் பெரும் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவத்தால் இந்தியன் 2 படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ் திரைத்துறையினர் அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் மேலாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் உறுதித்தன்மை குறித்து அரசு ஆய்வு செய்யும்’ என்று தெரிவித்தார்.

மேலும் ‘படப்பிடிப்பில்
விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு தரவும் ஆலோசனை செய்து வருகிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.