தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் படங்களை நேரடியாக OTT தளங்களுக்கு விற்பனை செய்வதற்கான விவாதங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
‘பொன்மகள் வந்தாள்’ படம் மார்ச் மாதம் வெளியாேக வேண்டிய சூழலில் கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்கிற உத்திரவாதம் இல்லை.
இந்த குழலில் சூர்யா நடித்து வெளியிடத் தயாராக உள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட அமேசான் நிறுவனம் முயற்சித்துள்ளது. அதற்கு ‘நான் நடிக்கும் படங்கள் திரையரங்கில் தான் முதலில் வெளிவரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார் சூர்யா.
அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட படம் தான் ‘பொன்மகள் வந்தாள்’ என்கிறது நடிகர் சூர்யா வட்டாரம். குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் OTT தளத்தில் நேரடியாக திரையிடுவதால் பெரும் பாதிப்பு ஏற்படாது எனக் கருதி சூர்யா தரப்பு அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமான செய்திகள் ஊடகங்களில் வெளியான போது 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மௌனமாக இருந்தது. இதற்கு எதிராக திரையங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்பில் அதிருப்தி, எதிர்ப்பு இருப்பது தெரியவந்தபோது சிவக்குமார் தரப்பில் இந்த ஒப்பந்தத்தை ஒத்திவைக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என்கிற விவாதம் ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில், நாங்க யார் தெரியுமா? என்கிற நாட்டாமை தொனியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோகிணி R.பன்னீர்செல்வம்
தன்னிச்சையாக அதிகார தொனியுடன் வெளியிட்ட ஆடியோ பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
இவர் நடத்தி வருகின்றே கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் புதிய படங்களை திரையிடும் எந்தவொரு தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தருக்கு அப்படம் ஓடி முடிகிற போது ஷேர் தொகையை வழங்கியதில்லை.
குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அதிகபட்சம் ஒரு வருடம் கழித்து சம்பந்தபட்டவர்கள் நடையாய் நடந்து தங்களுக்கு சேரவேண்டிய பங்கு தொகையை பெற வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நபர் ‘சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும், திரையரங்குகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என பேசியதை ஜீரணிக்க முடியவில்லை என்கிறது தயாரிப்பு வட்டாரம்.
பொன்மகள் வந்தாள் மூலம் தமிழ் சினிமாவில் பூகம்ப புயல் உருவாகாமல் சுமுகமாக முடிந்திருக்க வேண்டிய பிரச்னையை பூதாகரமாக்கி நெருக்கடியை உருவாக்கியது பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் என்கிறது தயாரிப்பாளர், திரையரங்கு மற்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரம்.
பிரச்னையை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே சிவகுமார் குடும்பத்து விருப்பமாக இன்னும் இருக்கிறது. அதனை ஆக்கப்பூர்வமாக நாணயமிக்க திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அணுகினால் பூகம்பம் பொன்மாலையாகி விடும் என்கின்றனர்.