விக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர் பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து வருகிறார்.

மான்ஸ்டர்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த போது, பிரியா பவானி சங்கரை எஸ்.ஜே.சூர்யா செல்லமாக குடும்ப குத்து விளக்கு என்று அழைப்பார்.

அதில் இருந்து பிரியா பவானி சங்கரை ரசிகர்களும் செல்லமாக குடும்ப குத்து விளக்கு என்று அழைக்கிறார்கள். இதற்கு எஸ்.ஜே.சூர்யா மட்டும் காரணமல்ல, பிரியா பவானி சங்கர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் தான்.
குடும்ப பாங்கானவேடங்களை தேர்வு செய்து நடிக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது கமலின் ‘இந்தியன் 2’ வில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே, விக்ரமின் 58 வது படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர், திடீரென்று அப்படத்தில் இருந்து விலகுவதாக கூறினார். படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அவர் விலகுவதாக கூறியதால், படக்குழு அதிர்ச்சியடைந்தது.

மேலும், வேறு ஹீரோயின் தேர்வு செய்வதற்கான கால அவகாசமும் இல்லாததால், பிரியா பவானி சங்கர் மீது தயாரிப்பாளர் கோபம் கொண்டதோடு, தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்க இருந்தார்.

பிரியா பவானி சங்கர், அப்படி கூற இந்தியன் 2 படம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அப்படத்திற்காக பிரியா பவானி சங்கர் கூடுதலாக தேதி கொடுத்ததால், அவரால் விக்ரமின் 58 வது படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லையாம்.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் மேற்கொண்ட விடா முயற்சியால்,  அதாவது, இந்த பிரச்சினை குறித்து பிரியா பவானி சங்கரிடம் விக்ரம் பேசியதாகவும், அதன் மூலம் பிரியா பவானி சங்கர் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் விக்ரம் 58 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு தரப்பு மற்றும் பிரியா பவானி சங்கர் இரு தரப்புக்கும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில், படப்பிடிப்பு தேதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், அதன் மூலம் பிரியா பவானி சங்கர் சமரசமாகிவிட்டாராம்.

தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ‘விக்ரம் 58’ படத்திற்கு பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின், என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், படத்திற்கு ‘அமர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்து படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது