விஜய்க்கு தொடரும் நெருக்கடி ஆடியோ ரிலீஸ் நடக்குமா

மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராகவும், அப்படத்தின் வியாபாரத்தை முடித்துக்கொடுக்கும் பொறுப்பு ஆகியவற்றை ஏற்றிருப்பவர் லலித்குமார்.

மாஸ்டர் படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், ஆடியோ உரிமைகள் 57 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழக உரிமை 70 கோடி ரூபாய், வெளிநாட்டு உரிமை 30 கோடி ரூபாய், கர்நாடகா உரிமை 8.65 கோடி ரூபாய், தெலுங்கு 9 கோடி ரூபாய், கேரளா உரிமை 6.25 கோடி ரூபாய், வட இந்திய உரிமை 23 கோடி ரூபாய் என மாஸ்டர் படத்தின் உரிமைகள் மட்டும் சுமார் 203.9 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே அத்தனை ஏரியா உரிமையையும் விற்று, குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக பணத்துக்கு விற்கப்பட்ட பெருமையை மாஸ்டர் பெற்றிருக்கிறது.

எனவே, அதிக பணத்துக்கு விற்பனையான இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமாரின் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு என்பது இப்படத்தின் மூலம் லாபம் பெறக் காத்திருக்கும் அனைவரது மத்தியிலும் ஒரு அதிர்வலையை உருவாக்கியது.

மாஸ்டர் படத்தின் வியாபாரம் முடிவடைந்து எல்லா ஏரியா உரிமைகளும் அவுட்ரேட் முறையில் விற்கப்பட்டிருக்கின்றன. அவுட்ரேட் மூலம் விற்பனை என்பதால் இனி அந்தப் படத்தின் வசூலுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே அதன் லாபத்துக்கும், நஷ்டத்துக்கும் பொறுப்பானவர்கள். எனவே, மாஸ்டர் படத்தின் தயாரிப்பு தரப்பு விற்பனையான பணத்தைப் பெற்றுக்கொண்டு புரமோஷன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் லலித் குமார் வீட்டில் இந்த ரெய்டு ஏன் நடக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கிறது தமிழ் சினிமா. ரெய்டு நடைபெறுவதன் உண்மையான காரணம் என்னவென்பது குறித்து விசாரித்தபோது,
மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கை நெய்வேலியில் நடத்திக் கொண்டிருந்தபோது பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் ஏ.ஜி.எஸ்., விஜய் மற்றும் அன்புச்செழியன் ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின்போது சில ஆவணங்கள் மற்றும் விஜய்யின் வங்கிக் கணக்கில் பதிவாகியிருக்கும் பணப் பரிவர்த்தனை குறித்த தகவல்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் பற்றி நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜய் தரப்பில் ஆஜரான ஆடிட்டர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது, 50 கோடி ரூபாயிலான பணப் பரிவர்த்தனை லலித்குமாருக்கும், விஜய்க்கும் இடையே நடைபெற்றிருக்கிறது. அந்த பணம் குறித்த தகவல்களை லலித்குமாரிடம் கேட்டறிந்துகொண்டு செல்ல நடத்தப்பட்ட விசாரணை தான் என்கின்றனர் வருமான வரித்துறை தரப்பினர்.

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர். எனவே விஜய்தான் மாஸ்டர் படத்தின் நிழல் தயாரிப்பாளர். தயாரிப்பு நிர்வாகத்தில் கை தேர்ந்தவர் லலித் குமார். எனவேதான் விஜய்யின் பணத்தை சேவியர் பிரிட்டோவை தயாரிப்பாளராக காட்டி, நிதி நிர்வாகத்தில் பெயர் பெற்ற லலித் குமாரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான், விசாரணை நடத்துவதற்காக லலித்குமார் வீட்டுக்கு வருமான வரித் துறையினர் சென்றுள்ளனர். ஆக விஜய் மீதான குறி இன்னும் விலகவில்லை என்பதையே இந்த விசாரணை காட்டுகிறது” என்கிறார்கள்.

மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு மார்ச் 15ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இன்னும் 4 நாட்களே மீதமிருக்கும் நிலையில், திடீரென வருமான வரித் துறையினரின் இந்த காய் நகர்த்தல் படக்குழுவை சிறிது அசைத்துப்பார்த்துவிட்டது.