தவறுகள் நடக்க தயாரிப்பாளர்களே காரணம்-7G சிவா

‘பொன்மகள் வந்தாள்’ OTT யில் வெளியிடப்படுவதை யொட்டி கடந்த சில நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் – தயாரிப்பாளர்கள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி காரசாரமான விவாதங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு, எதிர்ப்பு என்று வழக்கம்போல பிரிந்து நிற்கின்றனர்.

தயாரிப்பாளர்களிடம் இருந்து திரையரங்குக்கு படத்தை கொண்டு சேர்க்கும் பிரதான பங்கு வகிக்கும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படாமல் மௌனம் காத்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய படங்களை வாங்கக் கூடிய பெரும்பான்மையான விநியோகஸ்தர்கள் திரையரங்குகளை நடத்துபவர்களாக இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறுவதில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு என்கின்றனர்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் திரையரங்கு – விநியோகத் துறையில் முன்னணியில் இருக்கும் பிரபலத்திடம் பேசிய போது, “கொரோனா வைரஸ் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே மூடப்பட்டது திரையரங்குகள் தான். அதன் பின்னரே படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திரைப்படத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். அதனை எதிர்கொள்வதில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்.

நடிகர்களைப் பொறுத்தவரை வருவாய் இழப்பு மட்டுமே. மூலதன நஷ்டம், இழப்பு என்பது இல்லை. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற உத்திரவாதம் இல்லை என்பதற்காக ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை OTT பிளாட்பாரத்தில் திரையிடுவது எந்த வகையில் நியாயம்” என்கிறார்.

“தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகளின் சொத்துமதிப்பு அல்லது மூலதனம் சுமார் 5000 கோடி. திரைப்படங்களை முதலில் இவற்றில் திரையிடுவதன் மூலமாக மட்டுமே இத்தொழில் ஜீவித்திருக்க முடியும். நூறு ஆண்டுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளை ஒரு திரைப்படத்தின் மூலமாக சீர்குலைத்து நிலைகுலைய வைப்பது நியாயமில்லை” என்றார். “திரையரங்குகள் தான் சூப்பர்ஸ்டார், உலகநாயகன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார் போன்ற நடிகர்களை உருவாக்கி கொடுத்தது” என்கிறார்.

திரைப்பட விநியோகத் தொழிலை மட்டும் பிரதான தொழிலாகக் கொண்டிருக்கும் முண்ணனி விநியோகஸ்தர் சேலம் 7G சிவாவிடம் பேசிய போது, “கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம்பிரபு போன்று ஏராளமான நடிகர்கள் நடித்த 150 க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி விநியோகம் செய்திருக்கிறேன். முண்ணனி நடிகர்கள் நடித்த படங்களைக் காட்டிலும் பட்ஜெட் படங்கள் தான் அதிக லாபத்தைப் பெற்று தந்தது. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் லாபகரமாக இல்லை என்றாலும், தொழிலைத் தொடர்வதற்கு காரணம் ஏதாவது ஒரு படம் மிகப்பெரும் வசூலை குவித்துவிடும் என்ற நம்பிக்கை தான்” என்றவரிடம் “பொன்மகள் வந்தாள் ஒரு படம் OTT யில் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?” என்ற போது,

“நடிகர் சிவகுமார் குடும்ப உறுப்பினர்கள் சினிமா மூலம் வளர்ந்தவர்கள். அவர்கள் இந்த உயரத்தைத் தொட கண்ணுக்கு தெரியாத கடைக்கோடியில் போஸ்டர் ஒட்டுகிற தொழிலாளி கூட உதவியிருக்கிறார். கூலிக்கு வேலை செய்தாலும் அதனை நேசித்து செய்வது சினிமாவில் மட்டுமே. இவர்களைப் பின்தொடர்ந்து எல்லோரும் OTT மூலமாக படங்களைத் திரையிடத் தொடங்கினால் விநியோகஸ்தர் என்கிற ஒரு வர்க்கமே காணாமல் போய்விடும்.

இவர்களை நம்பி இருக்கும் ஃபிலிம் மீடியேட்டர்கள், படப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும். தொழில்நுட்ட வளர்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்கவேண்டும். இருக்கிற வேலைவாய்ப்பை பறிக்ககூடாது” என்றார்.

”விநியோகஸ்தர்கள் ஒழுங்காகக் கணக்கு கொடுப்பதில்லை, படம் ஓடி முடிந்த பின் பங்குத் தொகை கொடுப்பது தாமதமாகிறது’ என்கின்ற குற்றசாட்டு பற்றி பொன்மகள் வந்தாள் பிரச்னையை ஒட்டி திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என இரு தரப்பையும் தவறானவர்களாக தரம் தாழ்த்து விமர்சித்து வருகின்றனர். சிலர் செய்கிற தவறுகளை, ஒட்டுமொத்த தரப்பையும் தவறானவர்களாக சித்தரிக்கப் பயன்படுத்துவது தவறான அணுகுமுறை.

பெரும்பான்மையான விநியோகஸ்தர்கள் படம் ஓடி முடிந்தவுடன் கணக்கு முடித்து விடுகின்றனர். எங்களது பணம் தான் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்களிடம் முடங்கிக்கிடக்கிறது. இதனை யாரும் பொதுவெளியில் கூறுவது இல்லையே” என்றார்.

மேலும் தவறுகள் நடப்பதற்கான அடிப்படை தயாரிப்பாளர்களிடமிருந்தே தொடங்குகிறது, என்றவரிடம் , ‘எப்படி?’ என்கிற கேள்வியை எழுப்பிய போது “நடிகர்களுக்கான சம்பளத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் கொடுத்தால் எந்த சிக்கலும், தவறும் ஏற்படாது. பாதி கறுப்புப் பணமாக கொடுக்கிற போது அதனை சரி செய்ய வியாபாரம், திரையிடல் என எல்லா மட்டங்களிலும் முயற்சிக்கிறபோது சில தவறுகள் நடப்பது உண்மை தான். தயாரிப்பாளர் எல்லாமே அக்கவுண்ட் என மாறிவிட்டால் கணக்குகளில் தவறு ஏற்படுவது குறைந்துவிடும்” என்றார்.

“தியேட்டர் வசூல் கணக்கில் குளறுபடி என்ற போது, நான் புதிய படங்கள் திரையிடும் நேரத்தில் தியேட்டர்களுக்கு நேரடியாக செல்கிறோம். சில தவறுகளைக் கண்டறிந்து சரி செய்து வருகிறோம்.ஆன்லைன் வசதியுள்ள தியேட்டர்களில் மட்டுமே படம் திரையிடுவோம் என தயாரிப்பாளர்கள் பிடிவாதமாக இருந்து விட்டால் அனைத்து தியேட்டர்களும் கணினிமயமாகிவிடும்” என்றார்.

தியேட்டர்களில் உணவுப்பொருட்களின் அநியாய விலை குறித்து கேட்ட போது, “கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தகூடிய மால் தியேட்டர்களில் தான் நீங்கள் கூறுகிற குற்றசாட்டு நிகழ்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களைத் தவிர்த்து பிற ஊர்களில் 30 ரூபாய்க்கு மேல் சினாக்ஸ், உணவுப்பொருட்கள் விலை இல்லை’ என்றார்.

‘பொன்மகள் வந்தாள் பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு?’ என்ற போது, “இந்த பிரச்னையில் தயாரிப்பாளர் ஒரு தரப்பாக முடிவெடுப்பதைத் தவிர்த்து திரைத்துறை சார்ந்த சங்கங்களுடன் ஒருங்கிணைந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் அப்போது தான்OTT தளத்துக்கான படம் எது என்பதை தீர்மானித்து முடிவு எடுக்க முடியும். படம் தயாராக இருக்கிறது என்பதற்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என ஒரு தரப்பாக முடிவெடுப்பது திடமாக இருக்கின்ற சங்கிலி தொடர் துண்டாகி குழப்பம் ஏற்பட, தொழில் தேக்கமடைய வழிவகுக்கும்” என்கிறார்.