வாழவைத்த தமிழர்களுக்கு அர்பணித்த ரஜினி

கோவாவில் நடைபெறும் 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்திற்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மிக முக்கியமான திரைப்பட விழாவாக கருதப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50ஆவது வருடத் திருவிழா இன்று முதல் துவங்குகிறது. இன்று (நவம்பர் 20) துவங்கி வருகிற 28ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு இந்த விழா நடைபெறவுள்ளது.

பொன்விழாவான இந்தாண்டை மிகப்பிரம்மாண்டமாகத் துவங்கியது விழாக்குழு. தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றினர்.

அதனைத் தொடர்ந்து சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் பின்னர், ரஜினிகாந்துக்கு திரைப்படத் துறையில் சாதனை புரிந்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி’(ICON OF GOLDEN JUBILEE) விருது வழங்கப்பட்டது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த விருதினை ரஜினிக்கு வழங்கினார், மேலும் அமிதாப் பச்சன் விருதுக்கான சான்றிதழை வழங்கினார்
விருதைப் பெற்ற பின் ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது, “கோவா முதல்வருக்கு, மதிப்பிற்குரிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, என்னுடைய ‘இன்ஸ்பிரேஷன்’ அமிதாப் பச்சனுக்கு, மற்றும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 இந்த மதிப்புமிக்க விருதைப் பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி’ விருதிற்காக என்னை தேர்ந்தெடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதை என்னுடைய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், எனது படங்களில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லாவற்றிற்க்கும் மேலாக, என்னுடைய ரசிகர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” எனக் கூறினார்.

மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் கூறிய ரஜினிகாந்த், ‘என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்பதை மட்டும் தமிழில் கூறிய போது, ரசிகர்களின் கரகோஷத்தால் அரங்கம் நிறைந்தது.

அத்துடன் இவ்விழாவில் ‘வாழ்நாள்சாதனையாளருக்கான விருது’ இசபெல் ஹூப்பர்ட்-க்கு வழங்கப்பட்டது. பிரெஞ்சு நடிகையான இவர், 120 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். 16 பரிந்துரைகளுடன் சீசர் விருதுக்கு மிக அதிகமாக பரிந்துரைக்கப்பட்ட நடிகை ஆவார். மேலும், அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், 200 வெளிநாட்டு படங்கள் திரையிடப்படவுள்ளன. அதில் 24 படங்கள் ஆஸ்கார் பரிந்துரைகளுக்கான போட்டியில் உள்ளன. ‘பதாய் ஹோ’, ‘கல்லி பாய்’, ‘உரி’ போன்ற பாலிவுட் திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.

மேலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 12 வெவ்வேறு மொழி திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது.