தப்பிய ரஜினி சிக்கிய விஜய்

நடிகர் விஜய் வீட்டில் நேற்று பிப்ரவரி 6 முதல் இன்று வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தன் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேற்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சந்தித்த வருமான வரி அதிகாரிகள், அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் பனையூரில் இருக்கும் விஜய் வீட்டில் நேற்று இரவு முழுதும் தொடர்ந்த சோதனை இன்றும் நீடிக்கிறது விஜய்யிடம் 14 மணி நேரமாக வருமான வரி அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.

விஜய் வீட்டில் மட்டுமல்ல அவரது லேட்டஸ்ட் படமான பிகில் பட தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனத்திலும், சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.

அதேநேரம் அண்மையில் வெளிவந்த தர்பார் படத்துக்கு ரஜினியின் சம்பளம் 100 கோடி என்று பேசப்பட்டது. தவிர, நடிகர் ரஜினிகாந்த் 2002-03 மற்றும் 2004-05ம் ஆண்டு கால கட்டத்தில் வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறி அவருக்கு 66 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரஜினியின் மேல்முறையீட்டின் பேரில் தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவையும் வாபஸ் பெற்றது.

வருமானத்தை மறைத்ததாக ரஜினி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், ‘நான் வட்டிக்கு விட்டு சம்பாதித்தேன்’ என்று தீர்ப்பாயத்துக்கு சென்று மறைக்கப்பட்டதாக கூறிய வருமானத்துக்கு கணக்கு காட்டினார் ரஜினி.

இந்நிலையில் ரஜினிக்கு 300 சதவிகிதம் அபராதம் விதிக்க வாய்ப்புகள் இருந்தும், 100 சதவிகிதம் மட்டுமே (66 லட்சம்) அபராதம் விதித்திருக்கிறது வருமான வரித்துறை.

இந்நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கருத்து தெரிவிக்கையில், “வருமானவரி சோதனையில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்கு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு பல்லக்கு தூக்குவதற்கு தயாராகிவிட்டார் ரஜினி. என்.ஆர்.சி. நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று கூறிய அமித் ஷாவின் வாக்குறுதியை மறந்துவிட்டு ரஜினி இன்றைக்கு கஜினி ஆக மாறிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்தை ஆதரிப்பதால் அவர் மீதான வருமான வரித்துறை பிடி தளருகிறது. ஆனால் படங்களில் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த விஜய் வருமான வரித்துறையால் சட்டரீதியாக கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்” என்ற கருத்தையும் பகிர்ந்துள்ளார்.