நடிகர் ரஜினிகாந்த் ‘சந்திரமுகி 2’ படத்தை பார்த்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டுரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இதில் ரஜினிகாந்த் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இதனையும் பி.வாசுவே இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நான்கு நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் சினிமா வழக்கத்துக்கு மாறாக வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அன்றே படம் வெளியானது.படம் பற்றிய விமர்சனங்கள் படத்திற்கு ஆதரவாக இல்லை என்றபோதிலும் தமிழ்நாடு முழுவதும் ஆரவாரமான வரவேற்பு சந்திரமுகி 2 படத்திற்குதிரையரங்குகளில் இருந்தது.இந்நிலையில், ‘நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்’ என்று படக்குழுவின் சார்பில் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில் “மிகப்பெரிய வெற்றிப்படமான தனது சந்திரமுகில் புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் பி.வாசுவுக்கும் அருமையாக நடித்திருக்கும் தம்பிராகவா லாரன்சுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்