விஜய் வழங்கிய கொரோனா நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக நடிகர் விஜய்ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்சி அமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் என விஜய் நிவாரணம் அளித்துள்ளார்.

மேலும் அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய், புதுச்சேரி, ஆந்திரா , தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் என அவர் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் தனது ரசிகர் மன்றம் சார்பிலும் பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் பாதிக்கப்பட்டதில் இருந்தே நம் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வைரஸ் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே நிலையில், மறுபுறம் ஊரடங்கு உத்தரவால் வேலையும் வருமானமும் இழந்து லட்சக்கணக்கான மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். உண்ண உணவும், உறங்க வசிப்பிடமும் இன்றி பசியிலும் பட்டினியிலும் மக்கள் மடிந்து வருவது அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது.

இந்தப் பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கும் பல்வேறு பிரபலங்களும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க நிதியுதவி அளித்து வருகின்றனர். அதிலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலரும் கோடிக்கணக்கான தொகையை மத்திய மாநில அரசுகளுக்கு நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர். அத்துடன் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வரும் திரைத்துறை தொழிலாளர்களுக்காகவும் உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கியது திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரைப் போன்றே ஹிந்தி, தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் நிதியுதவி வழங்கி வந்தனர். தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகர் அஜித் பிரதமர் மற்றும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாய் வழங்கினார். மேலும், சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்தார்.

நடிகர் லாரன்ஸ் இதுவரை பல்வேறு வகையிலும், 4 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதியுதவிகளை வழங்கியுள்ளார். அத்துடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், சிவகுமார், நடிகைகள் நயன்தாரா, காஜல் அகர்வால், கங்கனா ரணாவத் என ஏராளமானவர்கள் தமிழ் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு நிதியுதவிகளை வழங்கி வந்தனர்.

இந்த செய்திகள் வெளிவந்த நேரங்களில் எல்லாம் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ‘நடிகர் விஜய் ஏன் நிதியுதவி செய்யவில்லை?’, ‘அவர் எத்தனை ரூபாய் நிதியுதவி வழங்கப் போகிறார்’ என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளின் முடிவில் அவர் பிகில் திரைப்படத்திற்கு 50 கோடி ரூபாயும், வெளிவரக் காத்திருக்கும் மாஸ்டர் படத்திற்காக 80 கோடி ரூபாயும் ஊதியமாகப் பெற்றதைக் குறிப்பிட்டிருந்தனர். இந்தத் தகவல்கள் விஜய் செய்யப் போகும் நிதியுதவி குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில் பல்வேறு கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய் இந்த நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.