அசுரன் படத்தில் ஆண்ட பரம்பரை வசனத்தை நீக்க நெருக்கடி

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அசுரன் திரைப்படம், பல தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கிய அதேசமயம், ஒரு தரப்பினரின் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறது.
பஞ்சமி நிலங்களைப் பற்றிப் பேசும் அசுரன் திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில், “ நாங்கதான் ஆண்ட பரம்பரை. நிலம் எங்ககிட்ட இருந்து உங்களுக்கு வந்துதா? உங்ககிட்ட இருந்து எங்களுக்கு வந்துதா” என்ற வசனம் இடம்பெறும்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக, “இன்னும் எத்தனை நாள்தான் ஆண்ட பரம்பரைன்னே சொல்லிக்கிட்டு இருப்பீங்க” என்ற கேள்வியெழும். இந்த வசனம் படத்தில் இடம்பெற்றிருந்ததை அறிந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ‘இந்த வசனங்களை நீக்கவேண்டும்’ என்று வெற்றிமாறனிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு வெற்றிமாறன் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மேலும் அந்த அறிக்கையில், “ஒரு திரைப்படம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக இருக்க வேண்டும். முகம் காட்டும் கண்ணாடி மீது கல்லெறியக் கூடாது.

அது உடைந்தால் பலரின் பாதங்களில் இரத்தம் படியும். அந்த நிலையை திரைப்படங்கள் எப்போதும் உருவாக்கிவிடக்கூடாது. திரைப்பட வசனங்கள் வழியாக யார் மனதையும் எந்தத் திரைப்படமும் புண்படுத்தக் கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பல அமைப்புகளிலிருந்தும், ‘இன்னும் வசனத்தை மாற்றவில்லையே ஏன்?’ என வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்டவண்ணம் இருக்கின்றனர். அவர்களிடம் “வசனத்தை நீக்கிய காட்சியை தியேட்டருக்கு அனுப்ப சிறிது காலம் பிடிக்கும். எனவே, இரண்டொரு நாட்களில் அந்த வசனம் நீக்கப்பட்ட காட்சி திரைப்படத்தில் இடம்பெறும்” என்று வெற்றிமாறன் தெரிவித்துவருகிறார்.