சூரரைப் போற்று டீசர் எப்படி?

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் நேற்று (ஜனவரி 7) வெளியிடப்பட்டது.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

டீசரில் இடம்பெறும் காட்சிகளும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி அமைந்துள்ளது. பல வயதுகளைக் குறிப்பிடும் விதத்தில் வித்தியாசமான தோற்றங்களில் சூர்யா நடித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனம்ஈர்த்த ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ எனத் தொடங்கும் வரிகளில் அமைந்த பாடலின் சிறு பகுதியும் டீசரில் இடம்பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். பைலட் ஆபீசர் நெடுமாறன் ராஜாங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும் மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இந்த வருட சம்மர் ரிலீஸாக வெளிவரவுள்ளது.