தாக்குதலுக்குள்ளான தமிழ் நடிகர்

சீனாவையும் கடந்து பல நாடுகளுக்கு கொரோனா பாதிப்பு படர்ந்தபோது மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது இந்தியா. அதிலும், தமிழ்நாட்டில் அந்தக் கவலையே இல்லாமல் இருந்தார்கள். ஆனால், இப்போதைய சூழலில் அதிக பாதிப்பு ஆளாகிக்கொண்டிருப்பவர்கள் இங்கிருக்கும் மக்கள்தாம்.

கொரோனா பாதிப்பு அடுத்த கட்டத்துக்குச் செல்லக் கூடாது என்றால், அதற்கான ஒரே வழி சமூகக் கட்டுப்பாடு. இந்த சமூகத்திலிருந்து நம்மையே ஒதுக்கி வைத்துக்கொள்வது. ஆனால், இதை வலியுறுத்திய தமிழ் நடிகர் ரியாஸ் கான் நடு ரோட்டில் சிலரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை கிழக்குகடற்கரை சாலைபனையூர் பகுதியில் ரியாஸ் கானின் வீடு அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்வதில் எப்போதும் அதிக சிரத்தையுடன் இருக்கும் ரியாஸ் கான், அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தினம் காலையில் ஜாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

அப்படி அவர் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது. சாலையில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி நின்று பேசிக்கொண்டிருந்ததைக் காண நேர்ந்திருக்கிறது. இதுபோல நிற்பதால்தான் கொரோனா பரவல் அதிகரிக்கிறது என்பதையும், ஏன் சோஷியல் டின்ஸ்டன்ஸ் முக்கியம் என்பதையும் விளக்கிக் கூறிய ரியாஸ் கானை அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர்.

சாலையில் வைத்து ரியாஸ் கானை தாக்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர்கள் சில நிமிடங்களில் ஓடிவிட, கானத்தூர் காவல் நிலையத்தில் ரியாஸ் கான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். ரியாஸ் கானின் புகாருடன், 144 உத்தரவு பிறப்பித்திருக்கும் சூழலில் பொது இடத்தில் கூடி நின்ற குற்றத்தையும் பதிவு செய்து இதில் தொடர்புடையவர்களை போலீஸ் தேடி வருகிறது.