சமுத்திரகனியை இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன்

“நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை,  நான் சிகப்பு மனிதன்” என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக அரசியல் பேசியவர் இயக்குநர் S.A.சந்திரசேகரன்.
மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.
இப்படத்தில் சமுத்திரக்கனி சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வாகை சூடவா, மௌனகுரு’ படங்களில் நாயகியாக நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.
ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார் ப்ரியங்கா.
சமுத்திரக்கனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரக்கனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள்.
நகைக்சுவை கதாபாத்திரங்களில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படப்புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.
நான் கடவுள் இல்லைபடத்தை பற்றி இயக்குநர் S.A.சந்திரசேகரன் கூறியதாவது,

“குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரக்கனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தை பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார். இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னுள் வித்திட்டார்.
சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையை கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படத்தில் நடித்துக்கொடுத்தார்.

இத்திரைப்படம் சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான படமாக அமையும். அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கறையும் பாராட்டப்பட வேண்டியது,” என்றார்.

இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.