ஸ்கூலே வேண்டாம்

0
523

கல்வியை போதிக்கும் இடங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் பல்வேறு வடிவங்களைப் பெற்று வருகிறது. ஆரம்பகால கட்டத்தில் குருகுல கல்வி இருந்தது. அதற்கடுத்தப்படியாக திண்ணைப் பள்ளிக்கூடம். அது அப்படியே பரிணாம வளர்ச்சியடைந்து பள்ளிகளை அரசு எடுத்த நடத்த ஆரம்பித்தது. அதற்கடுத்தப்படியாக சிறப்பான கல்வியை சேவை அடிப்படையில் தனியாரும் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றுமாய் இயங்கி வந்த தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இன்று அரசுப் பள்ளிகளை திணறிடித்துக்கொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளிகளின் ஏகபோக வளர்ச்சியால் பல பகுதிகளில் அரசுப் பள்ளி இழுத்து மூடப்பட்ட செய்திகளையும் அவ்வப்போது நாம் செய்தித்தாளில் படிக்கவும் செய்திருப்போம்.
“இருந்தாலும், இவய்ங்க பண்ற அக்கப்போர் தாங்க முடியலைப்பா… எதுக்கு ஃபீஸ் கேட்கறாங்கன்னே தெரியல. வாங்கறாங்க. ஏன் எதுக்குன்னு கேட்க முடியலை, பிள்ளைங்கள ஏதாவது கஷ்டப்படுத்திடுவாங்களோன்னு பயந்து போய் பேச முடியறதில்லை…” என்ற புலம்பல் ஏதோ லட்சத்தில் ஒரு பெற்றோரின் குரல் அல்ல. தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கும் 80 சதவீத பெற்றோர்களின் புலம்பல்கள்.
”ஃபீஸ் வாங்கறாங்க… இருந்தாலும், டியூஷன்லேயும் சேர்த்துவிட்டாதான், பசங்க ஓரளவுக்கு மார்க் வாங்குறாங்க… அப்போ கொடுக்கிற ஃபீஸ் தண்டம்தானா…” என்ற புலம்பல்களும் இருக்கவே செய்கின்றன. இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே வராதா…? இவ்வளவு ஃபீஸ் கட்டி படிக்க வச்சாலும் பசங்க நிம்மதியா இல்லை. அரக்கப் பரக்க சாப்பிட்றாங்க… விளையாட்றதுக்கு நேரமில்லை, கால்ல சக்கரத்தைக்கட்டிட்டுத்தான் அலையுறாங்க… பசங்கள பார்க்கறதுக்கே பாவமா இருக்கு” என்ற பெற்றோர்களின் புலம்பல் வெறும் புலம்பலாக மட்டுமே இருக்கிறது.
இந்த புலம்பல்களையே யோசனையாக எடுத்துக்கொண்டு, எதுக்காக பசங்க பள்ளிக்குப் போகணும், வீட்டிலிருந்தபடியே ஜாலியா படிக்க முடியாதா என்று எழுந்த கேள்வியின் விளைவாய் எழுந்ததுதான் மைக்ரோ ஸ்கூல்.
தனியார் பள்ளிகளின் போக்கை பிடிக்காத சில பெற்றோர்கள் (இவர்கள் எல்லோருமே ஐ.டி. துறையில் பணியிலிருப்பவர்கள்) தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியானது பள்ளி என்ற ஒரு விஷயத்தால் பாதிக்கக்கூடாது. என் குழந்தை விருப்பப்பட்டதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கு ஆங்கிலம் பிடித்தது என்றால், ஆங்கிலத்தை முழுமையாக கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும். பேட்மிண்ட்டன் விளையாடுவதுதான் அவனுக்குப் பிடித்தது என்றால், அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அவன் லட்சிய கனவை அடைய பள்ளி என்ற ஒரு அமைப்பு தடையாக இருக்கக்கூடாது என்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்துவிட்டார்கள்.
இதுகுறித்து சென்னை ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ் என்பவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சொன்ன விஷயங்கள்தான் இது.
“அவன் இப்போ நாலாவது படிக்கிறான். என் பையனுக்கு படிப்பை விட விளையாட்டில்தான் கூடுதல் இண்ட்ரஸ்ட். ஆனா, ஸ்கூலுக்கு போயிட்டு வரும்போதே ரொம்ப சோர்வா வர்றான். அதுக்குப் பிறகு விளையாட்றதுக்கு வாய்ப்பே இல்லாம போயிடுது. அந்தக் காலத்துஅல நாமெல்லாம் குறைஞ்ச பட்சம் 2 மணி நேரம் வெளிய நின்னு விளையாடுவோம். ஆனா, சென்னை மாதிரி நகரங்கள்ல… விளையாட்றதுக்கே 5 கி.மீ. அலைய வேண்டியதிருக்கு. 4 ம் கிளாஸ் படிக்கிறதே ஐ.ஏ.எஸ். படிக்கிற மாதிரி அவ்ளோ போர்ஷன். இந்த மாதிரி கஷ்டப்பட்டு படிச்சாதான் என் பையன் பெருசா ஆகப்போறானான்னு கேட்டா இல்லை என்பதுதான் என்னோட பதி. அவனோட ஆசை விளையாடணும்ங்கறதுதான். அதுல அவன் கவனம் செலுத்தனும்னு முடிவு பண்ணி, ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துட்டேன். இப்போ சென்னையில மைக்ரோ ஸ்கூல் நிறைய இருக்கு. இந்த ஸ்கூல்ல உங்க பையன் என்ன லெவல் படிக்கிறானோ, அந்தப் படிப்புக்கு 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரைக்கும் கிளாஸ் இருக்கும். எக்ஸ்பர்ட் தான் வந்து கிளாஸ் எடுப்பாங்க… இதனால, பையனோட படிப்பு, முன்பை விட நல்லா இம்ப்ரூவ் ஆகியிருக்கு. வெறும் 4 மணி நேரம்தான் ஸ்கூல்ங்கறதால, அவனுக்கு நிறைய விளையாட நேரம் கிடைக்குது. அவனுக்கு பிடிச்ச விளையாட்டை விளையாட புகழ்பெற்ற அகாடமியில சேர்த்து விட்ருக்கேன். என் பையன் இப்போ மகிழ்ச்சியா இருக்கான்.
இந்த மாதிரி படிக்கும்போது பையன் படிப்பு என்னவாகும், ஃபீஸ் எப்படியிக்கும் என்பது மாதிரியெல்லாம் பயந்தேன்… ஆனா, பையனை ரொம்ப அழகா கவனிச்சுக்கறாங்க… ஸ்கூலை விட சிறப்பான கற்றல் நடக்குது, ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கிற ஃபீஸைவிட 6ல் ஒரு பங்குதான். அதனால பணமும் மிச்சம் ஆகுது.
விளையாட்டு மட்டுமல்ல, வேற்று மொழிகள் கற்றுக்கொள்ளவும் அவனுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குது. இப்போ அவனுக்கு ஜப்பான் மொழி கற்றுக்கொடுத்துட்டு இருக்கேன். இந்த மைக்ரோ ஸ்கூல்ல பிளஸ் டூ வரைக்கும் எந்த தங்கு தடையுமில்லாம படிக்க வாய்ப்பு இருக்கு. அவன் பிளஸ் டூ படிச்சு முடிக்கறதுக்கு முன்னாடி குறைஞ்ச பட்சம் நேஷனல் லெவல்ல சாம்பியன் ஆயிருப்பான், 4 லாங்குவேஜ்களை கத்துட்டு இருப்பான் என்று புலங்காகிதம் அடைந்தார் கணேஷ்.
மைக்ரோ ஸ்கூல் என்ற ஒன்று இந்தியாவில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை என்பதும், முறையான அனுமதி இல்லாமல் போனாலும், மேற்கத்திய நாடுகளில் மைக்ரோ ஸ்கூல் மிக பிரபலம். அந்தளவிற்கு இந்தியாவில் பிரபலாமாகாமல் போனாலும், விரைவில் மிக பிரபலமாகும்.
மைரோ ஸ்கூலில் படித்தால் தேர்வெழுதுவது எப்படி என்ற கேள்வி பொதுவாகவே எழலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வுகளை மைக்ரோ ஸ்கூல்ல படிக்கும் குழந்தைகள் தனித்தேர்வர்கள் என்ற முறையில் தேர்வெழுத முடியும். அவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகள், கல்லூரிப் படிப்புகள், முது நிலைப் பட்டப் படிப்புகள் என்ற எந்த முயற்சியிலும் தங்கு தடையின்றி முன்னேறிச் செல்லலாம்.
இன்னும் பத்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் என்ற அமைப்பே இல்லாமல் போகும், மைக்ரோ ஸ்கூல் தேசம் முழுவதும் பிரபலமாகும். மைக்ரோ ஸ்கூல் என்ற அமைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்கள் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து தாங்கள் விருப்பப்பட்டதை கற்பதோடு, வீட்டிலிருந்தே படிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் இப்போதிருந்தே தொடங்கிவிட்டன.
மாற்றம் தானே மாறாதது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here