சிபிராஜ் கேட்டு வாங்கி நடித்த படம் கபடதாரி- தயாரிப்பாளர் தனஞ்செயன்
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து
தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப்
கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு
ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள்
எழுதியுள்ளனர்.
சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா18.01.2021 அன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில்
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்.
ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.
ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக
வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன்,
என்று கூறினார். சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர்
நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில்
நிறைய வாய்ப்புகள் வருகிறது என்றார்.
’கபடதாரி’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, வாழ்க்கையில் நாம் முன்னேற யாராவது ஒருவர் தேவைப்படுகிறார்கள், அந்த வகையில் என் முன்னேற்றத்திற்கு
தனஞ்செயன் சாரும் முக்கியமானவர். ஒரு முறை தனஞ்செயன் சார் போன் செய்து, இப்படி ஒரு படம் இருக்கிறது, பண்ணுவீங்களா
என்று கேட்டார். படத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்தது. உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த தனஞ்செயன் சாரின் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன், என்று நம்புகிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் சைமன் கே.சிங் பேசியதாவது, “இந்த படக்குழுவினருடன் எனக்கு இது இரண்டாவது படம். அதனால், நான் எனது குடும்பத்துடன் பணியாற்றியது போலதான் பணியாற்றினேன். அனைவரும் சொல்வது போல இயக்குநர் அவருக்கு என்ன வேண்டும், என்பதை சரியாக கேட்டு வாங்கி விடுவார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் நான் இசையமத்திருப்பது புதிய அனுபவமாக உள்ளது. தெலுங்கிற்கு வேறு நடிகர்கள்,
தமிழிக்கு வேறு நடிகர்கள். முக்கியமாக நாசர் சாருக்கு ஒரு பாடல் இருக்கிறது. அழகிய மொலோடியாக அந்த பாடல் இருக்கும்.
பின்னணி இசையை பொருத்தவரை கதைக்கு ஏற்றாவாறு தான் இருக்கும். பாடலாகட்டும், பின்னணி இசையாகட்டும் படத்திற்கு எது
தேவையோ அதை தான் கொடுத்திருக்கிறோம், அதை தவிர்த்து எதையும் முயற்சிக்கவில்லை.நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும்.”
என்றார்.
நடிகை நந்திதா ஸ்வேதா பேசுகையில், “எனக்கு முன்பு பேசிய அனைவரும் அனைத்தும் சொல்லிவிட்டார்கள். நான் பொதுவாக நடிக்க
கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன். அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த படத்தின்கதாப்பாத்திரம். இந்த படத்தை நான்
கன்னடத்தில் பார்த்துவிட்டேன். ரொம்ப சிறப்பான படம்.
என்றார்
பாடலாசிரியர் கு.கார்த்திக் பேசியதாவது, “நான் இசையமைப்பாளர் சைமனின் அனைத்து படங்களிலும் பணியாற்றி வருகிறேன். அவர்
சொன்னது போல ஒரு ஒருவர் தன்னை திரும்ப அழைப்பதே ரொம்ப சந்தோஷமான விஷயம். அப்படி தான் எனக்கு இந்த படத்தில்
அமைந்தது. இந்த படத்தின் இசை மிகப்பெரிய வரவேற்பு பெறும். இந்த படத்தில் என்னுடன் சேர்ந்து பாடல் எழுதிய அருண்பாரதி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளும், நன்றியும்
தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.நடிகர் சிபிராஜ் பேசியதாவது, “கொரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது தான்.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும்
படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு
ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை OTTபிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே,
தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன்.
ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார். உடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று
அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என் உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.
பொதுவாக ரீமேக் படம் செய்யும் போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும். இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று
நினைப்பார்கள், இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள். ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக
இயக்கியிருக்கிறார் பிரதீப்.
சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள
நிலையில், வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது.