பிரபல நாட்டுப்புற பாடகி மதுரைபரவை முனியம்மா இன்று(மார்ச் 29) அதிகாலை மரணமடைந்தார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது சமையல் கலை மூலம் மின்னிய இவர், மண்பானை கிராமத்து சமையலால் ரசிகர்களைக் கவர்ந்தார். வயது முதிர்வின் காரணமாக வேலை செய்ய இயலாமல் வறுமையில் வாடிய இவருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆறு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இவர் வறுமையில், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நலம் தேறி வந்ததாகத் தகவல்கள் வெளிவரத் துவங்கின.
ஆனால், கடும் மூச்சுத்திணறலால் இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவிற்குப் பல்வேறு திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்குகள் இன்று (மார்ச் 29) மதியம் 3 மணியளவில் மதுரையிலுள்ள இவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது.